இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே! யூடர்ன் போட்டு.. டேபிள உடைச்சு! அதிருப்தியில் திமுக உடன்பிறப்புகள்

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதே தோல்வி அடைந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினின் தோல்வியை திமுகவினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் எனவும், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர், அதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை என பல தகவல்கள் வெளியானது. ஆனால் ஸ்டாலின் லண்டன் சென்று வந்துவிட்ட பிறகும் இன்னும் அமைதியாகவே இருப்பது இளைஞர் அணியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. குறிப்பாக திமுவினர். அடுத்தடுத்து 2 முறை ஆட்சியை திமுக அமைத்ததில்லை என்ற செண்டிமெண்ட் இந்த தேர்தலில் தொடர்ந்திருக்கிறது.

    Advertisement

    ஆனால், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை அந்த கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பலம் பொருந்திய அமைச்சர்களும் படுதோல்வியை சந்தித்தனர்.

    திமுக தோல்வி

    இதை அடுத்து தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்த திமுக தலைமை கள ஆய்வு குழுக்களை அமைத்தது. தொடர்ந்து மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் அந்த குழு ஆய்வு மேற்கொண்டது. கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பல தரப்பினரை நேரில் சந்தித்து கருத்துக்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

    Advertisement

    முக ஸ்டாலின்

    இந்த அறிக்கையில் நீண்ட காலமாக கட்சிக்குள் இருந்த அதிருப்தி, நிர்வாக குறைபாடுக,ள் தொகுதி பிரச்சனைகள், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலும் வீட்டிலும் இந்த அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த ஸ்டாலின், இது தொடர்பாக நிர்வாகிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.

    மறுசீரமைப்பு

    அது மட்டும் அல்லாமல் திமுகவை மறுசீரமைப்பு செய்ய தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி, அப்துல்லா, பரந்தாமன், எழிலன், முரசொலி, கருணா ஆகியோர் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம், மாவட்டங்களை இன்னும் அதிகமாக பிரிக்க வேண்டும் என சொன்னார்களாம்.

    Advertisement

    2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ.

    இதை அடுத்து அந்த மறுசீரமைப்பின் முக்கிய அம்சமாக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமனம் செய்ய திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின். தற்போது பெரும்பாலும் திமுகவில் ஒரு மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். அதுவும் 30 40 ஆண்டு காலமாக ஒருவரே உள்ளர். வேறு ஒருவர் மாவட்ட செயலாளராக இருந்தால் அவர் அந்த முன்னாள் அமைச்சரின் ஆதரவாளராகவும் அல்லது வாரிசாகவோ தான் இருப்பார்கள் என்ற பேச்சு உள்ளது.

    115 மாவட்ட செயலாளர்கள்

    பல மாவட்டங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்படி குறுநில மன்னர்களாகவே முன்னாள் அமைச்சர்கள் வலம் வந்து நிலையில், அவர்கள் அதிகாரத்தை குறைக்கும் பொருட்டு இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என தமிழக முழுவதும் 115 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படலாம் எனவும் அவர்களில் இளம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

    Advertisement

    உதயநிதி

    இதனால் உற்சாகத்தில் இருந்தனர் இளைஞர் அணியினர். மேலும் உதயநிதியை சுற்றி பலரும் வலம் வரத் தொடங்கினர். திமுக தலைவர் ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வந்ததும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால் மிக்க உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ஸ்டாலின் வருகை தந்த பிறகும் அது தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதற்கான முதற்கட்ட பணிகள் கூட தொடங்கவில்லை.

    இளைஞரணியினர் அதிருப்தி

    ஏற்கனவே திமுகவில் நீடித்த நிலை தான் தற்போதும் தொடர்கிறது. கள ஆய்வுக்குழு, மறுசீரமைப்புக்குழு என குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அவர்கள் கொடுத்த எந்த அறிக்கையும் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் புதிய மா.செ. நியமனம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால் உற்சாகம் இழந்துள்ளனர் திமுக இளைஞரணியினர்.

    English Summary

    DMK cadres express disappointment as proposed district restructuring and new secretary appointments remain pending after the 2026 election defeat.