சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியை மறுசீரமைக்கும் வகையில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்களின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் திமுக உடன் பிறப்புகள். மேலும் ஒழுங்காக செயல்படாத மாவட்ட செயலாளர்களின் தொகுதிகளை பிரித்து கொடுத்துவிட்டு, சிறப்பாக வேலை செய்பவர்களின் தொகுதிகளை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதே தோல்வி அடைந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினின் தோல்வியை திமுகவினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
தமிழக அரசியலில் நீண்ட காலமாக ஆட்சியையும், கட்சியையும் வலுவாக நடத்தி வந்த திமுக, சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், கட்சியின் அடித்தள அமைப்பையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருந்ததை திமுக தலைவர் முக ஸ்டாலின் உணர்ந்ததாக சொல்கின்றனர் திமுகவினர். இதற்காகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 36 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், முன்னணி உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் கருத்துக்களை சேகரித்தது. இந்த ஆய்வுக் குழு தனது விரிவான அறிக்கையை விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. ஏற்கனவே இருந்த 78 மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டத்தை திமுக தலைமை மீண்டும் பரிசீலித்து வந்தது. அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே திமுக மறு சீரமைப்பு குழு அளித்த அறிக்கையின்படி திமுகவை மறுசீரமைப்பு செய்ய மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1,2, 3 என சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. சோளிங்கர் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி என்பதால் அது மட்டும் ஒரு கட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மேலும் 2 மற்றும் 3 என்ற எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திமுக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது அதன் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் தான் மாவட்டங்களை பிரித்ததால் ஏற்கனவே அந்த பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல்லில் மேற்கு கிழக்கு என மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ ஐ பெரியசாமி மகனுமான ஐபி செந்தில்குமார் கட்டுப்பாட்டில் 4 மாவட்டங்கள் இருந்தது. முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் கட்டுப்பாட்டில் 3 சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஒரு மாவட்டமாகவும், திண்டுக்கல், நத்தம் ஒரு மாவட்டமாகவும், நிலக்கோட்டை, ஆத்தூர் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபி செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கொந்தளிப்பினை பதிவு செய்து வருகின்றனர். இதேபோல சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொகுதிகளை இழந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கொந்தளிப்பினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் யார் யார் மாவட்ட செயலாளர்கள் என அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியான பிறகு இந்த பிரச்சனை மேலும் பெரிதாகலாம் என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.திமுக
மு.க. ஸ்டாலின்
அண்ணா அறிவாலயம்
மாவட்ட செயலாளர்கள்
ஐபி செந்தில்குமார்
திமுக உடன் பிறப்புகள்