சென்னை: திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெரியார் விருது திமுக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கும், அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவர் சுபாஷுக்கும் வழங்கப்பட உள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திமுக மாநிலங்ளவை குழு தலைவர் திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக மருத்துவ அணி செயலாளர் கனிமொழி என்.வி.ம்.சோமுவுக்கு பாவேந்திர விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு பெரியார் விருதும், சேலம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவர் சுபாஷுக்கு அண்ணா விருதும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கு பேராசிரியர் விருதும், முரசொலி அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் முரசொலி செல்வம் விருது பத்திரிகையாளர் திருமாவேலனுக்கு வழங்கப்பட உள்ளது.