திமுக மறுசீரமைப்பு நடவடிக்கை.. பரிந்துரையை கிடப்பில் போட்ட ஸ்டாலின்? அறிவாலயத்தில் நடந்தது என்ன?

  • சென்னை: திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கிடப்பில் போட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. எந்தவித மறுசீரமைப்பு நடவடிக்கையாக இருந்தாலும், இடைத்தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் கூறிவிட்டதால் சீனியர் நிம்மதியில் இருக்கின்றனர்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் அடைந்த எதிர்பாராத தோல்வியில் இருந்து திமுக மீண்டு வர முயற்சித்து வருகிறது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் அடைந்த தோல்வி காரணமாக, திமுக நிர்வாகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காக 38 குழுக்களை நியமித்து தொகுதி வாரியாக கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    Advertisement

    அதனை ஸ்டாலினிடம் சமர்ப்பித்த சூழலில், அந்த கருத்துக்களை ஒருங்கிணைத்து மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க ஸ்டாலின் 11 பேர் கொண்ட குழுவை தங்கம் தென்னரசு தலைமையில் அமைத்தார். இதன்பின் லண்டன் சென்று ஓய்வில் இருந்த ஸ்டாலின், 2 வாரங்களுக்கு பின் சென்னை திரும்பினார்.

    இதனால் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு பின் மறுசீரமைப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் சீனியர் நிர்வாகிகள் பலரும் தங்களின் கைகளில் இருந்து அதிகாரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. பலரும் ஸ்டாலினை நேரில் சந்தித்தே மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

    Advertisement

    ஆனால் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி தரப்பில் திமுகவில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், உள்ளாட்சித் தேர்தலிலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி இருக்கின்றனர். அதேபோல் தங்கம் தென்னரசு உடன் சுமார் 2 மணி நேரங்களுக்கும் மேல் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

    அதில் சுமார் 20 மாவட்டச் செயலாளர்களுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கவும் பேசப்பட்டது. திடீரென ஸ்டாலின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இடைத்தேர்தலுக்கு பின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம் என்று ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. இதனால் சீனியர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

    English Summary

    DMK: DMK Chief Stalin Puts Party Reorganization Actions on the Backburner due to By polls