சென்னை: 2024-25ஆம் ஆண்டு மாநிலக் கட்சிகளால் பெறப்பட்ட நன்கொடை 3 மடங்கு அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திமுக ரூ.365.78 கோடியுடன் முதலிடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.184.96 கோடியுடன் 2வது இடத்திலும் இருக்கின்றன. இதுதொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெறும் ரூ.20 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்கொடைக்கான உரிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி மாநிலக் கட்சிகள் சமர்ப்பித்த விவரங்களின்படி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் அடைப்படையில் 2024-25ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகளாக் பெறப்பட்ட நன்கொடை ரூ.1,051.66 கோடி என்பது தெரிய வந்துள்ளது. முந்தைய நிதியாண்டை ஒப்பிடும் போது இது 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மாநிலக் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை ரூ.347.69 கோடியாகும். 2023-24ல் மொத்தமாக 2,861 நன்கொடைகள் பெறப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டில் 5,297 நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் மற்றும் வர்த்தமே நிறுவனங்களே அதிகமாக நன்கொடை கொடுத்துள்ளன. இவர்களின் பங்களிப்பு ரூ.227.61 கோடியில் இருந்து ரூ.644.93 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2024-25ல் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளில் ரூ.365.78 கோடியுடன் திமுக முதலிடத்தில் உள்ளது. இதில் ரூ.300.64 கோடி அறிவிக்கப்படாத நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.184.96 கோடியுடன் 2வது இடத்திலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.140.04 கோடியுடன் 3வது இடத்திலும், ரூ.83 கோடியுடன் தெலுங்கு தேசம் கட்சி 4வது இடத்திலும், ரூ.66 கோடியுடன் அதிமுக 5வது இடத்திலும், ரூ.60 கோடியுடன் பிஜு ஜனதா தளம் 6வது இடத்திலும், ரூ.33,23 கோடியுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 7வது இடத்திலும், ரூ.25.33 கோடியுடன் ஜனசேனா 8வது இடத்திலும், ரூ.18 கோடியுடன் ஐக்கிய ஜனதா தளம் 10வது இடத்திலும் உள்ளன. இதில் 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் புருடெண்ட் எலக்டோரல் அறக்கட்டளை அதிகமாக ரூ.434 கோடியை 38 முறை நன்கொடையாக அளித்துள்ளது. இதன்பின் டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் ரூ.160 கோடியும் வழங்கியுள்ளது. இதன்பின்னர் புரோக்ரஸிவ் எலக்டோரல் அறக்கட்டளை, வேதாந்தா, ஏபி ஜெனரல் எலக்டோரல் அறக்கட்டளை ஆகியவை இருக்கின்றன.