வாயை மூடி பேசவும் மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்!

  • சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கான உண்மையான காரணத்தை அறிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்தார். இந்த உண்மை கண்டறியும் குழு, மாவட்டச் செயலாளர்களின் பேச்சுக்களை மட்டுமே கேட்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் உண்மையான காரணங்களை சொல்ல முடியாமல் திமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி, அக்கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்தும் முக்கிய கட்சிகள் விலகி இருப்பதால், லோக்சபா தேர்தலுக்கு தயாராக கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக ஸ்டாலின் கருதுகிறார். இதுதொடர்பாக விசாரிக்க உண்மை கண்டறியும் குழு ஒன்றை ஸ்டாலின் அமைத்தார்.

    Advertisement

    ஆனால் அந்த குழு அடிமட்ட தொண்டர்களை சந்திக்காமல், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கு ஏற்ப கூட்டங்களை நடத்தி வருகிறது. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குத் தலைமைக்கு நெருக்கமான சில மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளே முக்கியக் காரணம் என அடிமட்டத் தொண்டர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தற்போது அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பொதுமக்களிடமோ அல்லது அடிமட்டக் கட்சி நிர்வாகிகளிடமோ நேரடியாகப் பேசுவதில்லை. மாறாக, மாவட்டத் தலைநகரங்களில் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் கட்சி அலுவலகங்களில், தோல்விக்குக் காரணமான அதே மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் முன்னிலையில் பலரையும் அழைத்து பேசி வருகின்றனர்.

    Advertisement

    மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இருப்பதால், தொண்டர்கள் யார் மீது குறை சொல்வது கிடையாது. உட்கட்சி பூசல் குறித்தும் வாய் திறப்பது இல்லை. தேர்தலில் யார் வேலை செய்யவில்லை, எந்தெந்த அமைச்சர்கள் மீது மக்களுக்குக் கோபம் இருந்தது என்ற உண்மைகளைச் சொல்ல தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ஆனால் தொண்டர்களை உள்ளே விடாமல், தோல்விக்குக் காரணமான மாவட்டச் செயலாளர்களின் பேச்சை மட்டுமே இக்குழுவினர் கேட்டுச் சென்றால், தலைமைக்கு எப்படி உண்மை நிலவரம் தெரியும் என்று தென் மாவட்டங்களில் ஆதங்க குரல்கள் எழுந்துள்ளன. இந்த ஒருதலைப்பட்சமான ஆலோசனைக் கூட்டங்களால், மாவட்டச் செயலாளர்கள் தவறுகளை மறைத்துவிடுகிறார்கள்.

    Advertisement

    கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழையாமை அல்லது விஜய் அலை போன்ற இதர காரணங்களை முன்னிறுத்தித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதாகக் கட்சிக்குள் பேச்சு பலமாக எழுந்துள்ளது. இதனால், தலைமைக் கழகம் அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் அடிப்படை நோக்கமே சிதைந்துவிடும் என்றும், உண்மையான காரணங்கள் மு.க.ஸ்டாலினுக்குச் சென்றடையாது என்றும் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த விசாரணை முறையால் அதிருப்தியடைந்துள்ள பல உண்மை விசுவாசிகள் மற்றும் அடிமட்ட நிர்வாகிகள், உண்மை கண்டறியும் குழுவின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக அண்ணா அறிவாலயத்திற்குப் புகார் கடிதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். தோல்விக்குப் பிறகாவது கட்சியைச் சீரமைக்கத் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த வேளையில், இந்த உண்மை கண்டறியும் குழுவும் தங்களை ஏமாற்றுவதாகக் கூறி திமுக தொண்டர்கள் பெரும் விரக்தியில் இருக்கின்றனர்.

    English Summary

    DMK: DMK Fact-Finding Committee Blasted! Grassroots Workers Frustrated as Leaders Only Listen to District Secretaries