மகளிர் விடியல் பயணம் அல்ல.. இனி மகளிர் வெற்றிப் பயணம்.. விரைவில் விஜய் வெளியிடும் அறிவிப்பு!

  • சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர், விரைவில் மகளிர் வெற்றிப் பயணம் என்று மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மகளிர் பயணம் என்று மாற்றப்பட்டிருந்த நிலையில், திமுகவினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    தவெக ஆட்சி அமைக்கப்பட்டு 2 மாதங்களாகி இருக்கும் சூழலில், அடுத்தடுத்து திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தமிழ்நாடு திறன் மேம்பாடு என்றும், முதல்வர் படைப்பகம் திட்டத்தின் பெயர் படைப்பகம் என்றும் மாற்றப்பட்டது.

    Advertisement

    அந்த வகையில் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் திட்டம் மகளிர் விடியல் பயணம். இந்த திட்டத்தின் மூலமாக மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம். இதன் மூலமாக கோடிக்கணக்கான பெண்கள் பயன் அடைந்தனர். மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திட்டத்தின் பெயரில் இருந்த விடியல் என்ற வார்த்தையை மட்டும் தவெக அரசு நேற்று நீக்கியது.

    தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 90% பேருந்துகளில் மகளிர் பயணம் என்று பெயர்ப்பலகை மாற்றப்பட்டது. டிஜிட்டல் பேருந்து பலகைகளிலும் விடியல் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தமிழன் பார்த்திபன் முறையான விளக்கமும் அளிக்கவில்லை. மகளிர் விடியல் பயணம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அரசாணையும் வெளியிடப்படவில்லை.

    Advertisement

    இதனால் திமுகவினர் சோசியல் மீடியாவில் விமர்சிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் விரைவில் மகளிர் பயணம் என்ற பெயர் மகளிர் வெற்றிப் பயணம் என்று மாற்ற செய்ய தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயணத் திட்டமும் செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று அதிகாரிகளால் சொல்லப்பட்டது. ஆனாலும் தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    English Summary

    DMK: DMK 'Magalir Vidiyal Payanam' Scheme Reportedly Rebranding as 'Magalir Vetri Payanam' soon by TVK