தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்! ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு!

  • சென்னை: ஒரு டிராலி நிறைய திமுக தோல்வி அடைந்தது ஏன் என்ற கருத்துக்களையும், புகார்களையும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த நிர்வாகிகளான எஸ்.ஜோயல் மற்றும் எவ வேலு மகன் கம்பன் ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர். இந்த வீடியோ திமுகவினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவை அடிமட்ட அளவில் மறுசீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் திமுகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கான உண்மையான காரணங்கள் மற்றும் உடன்பிறப்புகளின் குமுறல்களைக் கண்டறியும் நோக்கில் கட்சித் தலைமையால் 'கள ஆய்வுக் குழு' அமைக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    அதன்படி கடந்த 4 நாட்களாக கள ஆய்வின் போது வந்த புகார்கள், கருத்துக்களை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்து வருகின்றனர். இக்குழுவில் சிவகங்கை, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளுக்கு எஸ். ஜோயல் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தங்களது கள ஆய்வு அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை அறிவாலயத்தில் சமர்ப்பித்தனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மத்தியில் படுவேகமாக டிரெண்டாகி வருகிறது. வழக்கமாக அரசியல் கட்சிகளின் ஆய்வுக் குழுவினர் தங்களது அறிக்கைகளை ஒரு சில கோப்புகளாகவோ அல்லது புத்தகங்களாகவோ தான் சமர்ப்பிப்பார்கள்.

    Advertisement

    ஆனால், திமுகவின் இந்த ஆய்வுக் குழுவினர் சமர்ப்பித்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அடிமட்டத் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான புகார் கடிதங்கள் மற்றும் கருத்துக்கள் ஒரு புத்தகமாக மாற்றி, அதனை டிராலியில் தள்ளிக் கொண்டு வந்து ஸ்டாலினின் அறையில் எசு. ஜோயல் மற்றும் எ.வ.வே. கம்பன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

    இதனால் கள ஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஸ்டாலின் முழுமையாக வாசித்து அதற்கேற்ப விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    DMK: DMK Panel Wheels 'Trolley Full of Complaints' to Stalin Over Election Loss