சென்னை: திமுக மறுசீரமைப்பு தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களில் அக்கட்சி சீனியர்களுக்கு பெரிதாக விருப்பம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், 70 வயதை கடந்தாலும் எங்களின் செயல்பாட்டில் சுணக்கம் இருக்கிறதா என்றும் ஸ்டாலினிடம் சீனியர்கள் பேசி இருப்பதாக அறிவாலயத்தில் பேச்சுகள் அடிபட தொடங்கி இருக்கிறது.
திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு 70 வயது நிர்ணயம் மற்றும் 3 முறைக்கு மேல் இனி மாவட்டச் செயலாளராக இருக்க முடியாது என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த செயற்குழு தீர்மானத்தால் எவ வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், காந்தி, முத்துசாமி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பதவியை இழக்க போகின்றனர்.
இதன் மூலமாக திமுகவில் சுமார் 50 பேருக்கு புதிதாக மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவசியம் என்று சொன்னாலும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது சீனியர்களின் அரசியல் செயல்பாடுகள் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு சீனியர்களின் அனுபவமும், தேவையும் அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை திடீரென விலகி நிற்க சொல்வது கட்சிக்கே அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். அதேபோல் கிளை, ஒன்றியம், வட்ட, பேரூராட்சி நிர்வாகம் வரை திமுக வயது வரம்பை நிர்ணயித்திருக்கிறது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 90% நிர்வாகிகள் பதவியை இழக்க வாய்ப்புகள் உள்ளது. திமுகவில் இளம் ரத்தம் பாய்ச்சப்படும் என்றாலும், கட்சியின் மொத்த கட்டுப்பாடும் உதயநிதி ஸ்டாலின் வசம் செல்லும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சீனியர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், திடீரென அந்த பொறுப்புக்கு இளைஞர்களை கொண்டு வந்தால், அவர்களுக்கு இடையில் கோஷ்டி பூசல் ஏற்படும் என்று திமுக தலைமை கருதுகிறது. இதனால் சீனியர்களை ஒட்டுமொத்தமாக நீக்குவதை விடவும் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாவட்ட அளவிலான தேர்தல் நடத்தி இளைஞர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தால், கட்சி வேலை செய்யவும் சரியாக இருக்கும் என்று ஆலோசித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின் ஸ்டாலினிடம் சில சீனியர்கள் பேசி இருக்கின்றனர். அப்போது 70 வயதை கடந்தாலும் நாங்கள் எந்த செயல்பாடுகளிலும் சுணக்கம் காட்டவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவர்களை ஸ்டாலின் சமாளித்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் செப்டம்பர் 3வது வாரத்தில் திமுக தலைமையிடம் இருந்து அறிவிப்பு வரும் என்று அறிவாலயத்தில் பேச்சுகள் முனுமுனுக்கின்றன.