சென்னை: "நடந்து முடிந்த தேர்தலில், கூட்டணியுடன் சேர்ந்தே 59 சீட்டுகளைதான் திமுக வாங்கியது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் திமுக தோற்றாலும், அதில் கிடைக்கும் ஓட்டுகள் திமுகவுக்கான ஓட்டுகள்தான். எனவே, திமுகவின் சொந்த பலத்தை தெரிந்துகொள்ளக்கூடிய தேர்தல் இது" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "கடந்த முறை தேர்தலுடன் இந்த தேர்தலை ஒப்பிடுவதே தவறு.. 80 சதவீதம் இப்போதைய வாக்குப்பதிவு அதிகம். சராசரியாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு என்பதே 60-65 சதவீதம்தான். இடைத்தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு என்பது அதிகம்தான்.
இப்போதைக்கு யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்று பேசுவதே முட்டாள்தனம்... இன்னும் 24 மணி நேரத்தில் ரிசல்ட் வந்துவிடப் போகிறது. யார் கரை சேர்ந்தார்கள், யார் கரை ஏறாமல் ஒதுங்கிப் போனார்கள் என்பது அப்போது தெளிவாகிவிடும். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு.. அதை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், விஜய்க்கு அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு நம்பிக்கை கூடும். இன்னும் 5 வருடங்கள் இருக்கின்றன, 5 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வரும். ஒரு "வின்னிங் ஸ்ட்ரீக்" உருவாகும். 2 தொகுதிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால், இப்போது இருக்கிற நிலை தொடரும். ஆனால் ஒரு தொகுதியில் தோல்வி ஏற்பட்டாலுமே அது விஜய்க்கு பின்னடைவு தான். ஒருவேளை 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால், "இந்த ஆட்சி நீடிக்காது, கவிழ்ந்துவிடும்" என்ற எண்ணம் இப்போது இருப்பதைவிட மேலும் வலுப்பெறும்... அதனால் இந்த இடைத்தேர்தல் விஜய்க்கும், தவெக அரசுக்கும் ஒரு விதத்தில் வாழ்வா, சாவா தேர்தல். அதேசமயம், விஜய் 2 தொகுதிகளிலும் தோற்றால், திமுக அதை கொண்டாடும்.. கூத்தாடும்.. மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை தொடங்கும்... அதிமுக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியின் அரசியல் பலனை திமுக அறுவடை செய்யும்.. ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, தவெகவும் திமுகவும் தோற்றுப் போனால், அந்த வெற்றியை அதிமுகவால் பெரிய அரசியல் லாபமாக மாற்ற முடியாது. மாறாக, தவெகவின் பலம் குறைந்துவிட்டது என்ற பார்வையை உருவாக்கி, திமுக தனது அரசியல் நிலையை தக்கவைத்துக்கொள்ளும். அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் அரசியல் தாக்கத்தை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், திமுகவிடம் இருக்கும் பண பலம், ஊடக பலம் உள்ளிட்ட அரசியல் கட்டமைப்புகளும் அதற்கு உதவும்.. அதிமுகவைப் பொறுத்தவரை, கூட்டணி இல்லாமல் தனித்துத்தான் போட்டியிடுகிறது. பாமக நடுநிலை என்று போய்விட்டது. பாஜகவின் ஓட்டு எந்தப் பக்கம் செல்லும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. அந்த ஓட்டு பெரும்பாலும் எதிர்ப்பு திமுக ஓட்டு என்பதால், அது எந்தப் பக்கம் போகும் என்பது கடினம். திமுகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் இன்னொரு முக்கியமான சோதனை. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் வெளியேறிய நிலையில், திமுக இப்போது தனி மரமாக நிற்கிறது. கூட்டணி இல்லாமல் திமுக எவ்வளவு ஓட்டு வாங்குகிறது என்பதுதான் இந்த தேர்தலில் தெரியப்போகிறது.. ஏனென்றால், கூட்டணி இல்லாமல் திமுக இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. ஜெயலலிதா, எம்ஜிஆர் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் திமுக அப்படி வென்றதில்லை.. நடந்து முடிந்த தேர்தலில், கூட்டணியுடன் சேர்ந்தே 59 சீட்டுகளைதான் திமுக வாங்கியது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் திமுக தோற்றாலும், அதில் கிடைக்கும் ஓட்டுகள் திமுகவுக்கான ஓட்டுகள்தான். எனவே, திமுகவின் சொந்த பலத்தை தெரிந்துகொள்ளக்கூடிய தேர்தல் இது. கூட்டணி கட்சிகள் களத்தில் பெரிய அளவில் இல்லாததும் இந்த தேர்தலின் முக்கிய அம்சம். தவெக கூட்டணியில் திருமாவளவன் மட்டும் மதுராந்தகத்தில் ஓரளவு பிரச்சாரம் செய்தார். தாராபுரத்தில் அவர் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யாததற்கு, அங்கு குறிப்பிட்ட ஓபிசி சமூகத்தின் வாக்குகள் ஒருங்கிணைந்துவிடும் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம். திருமா அங்கு சென்றால் எதிர்மறையான விளைவு ஏற்படும் என்ற பார்வையும் களத்தில் இருக்கிறது. விஜய்க்கு தலித் வாக்குகள் கணிசமாக செல்லும் நிலையில், அதற்கு எதிராக ஓபிசி வாக்குகள் ஒருங்கிணைகிறதா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, திமுக, அதிமுக என வழக்கமாக பிரியும் ஓபிசி வாக்குகள் ஒரு பக்கம் திரளுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தாராபுரத்தில் இந்த ஓட்டு நகர்வு எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. அதனால், தாராபுரம் இதற்கான ஒரு 'டெஸ்டிங் கிரவுண்டாக' இருக்கலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.இடைத்தேர்தல் வெற்றி தோல்வி
திமுகவுக்கு டபுள் லாபம்
பாஜக ஓட்டு யாருக்கு
கூட்டணி கட்சி - திருமாவளவன்