துரைமுருகன் வருத்தம்.. பேத்திக்கு சுயமரியாதை திருமணம் நடத்தாதது ஏன்? விளக்கம்

  • சென்னை: ''அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி வேற்று சாதியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், அவரை வைதீக முறைப்படி திருமணம் செய்வதாகவும் கூறினார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பேத்தியின் திருமணம் நடைபெற்றது. இதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம்'' என தனது பேத்திக்கு ஏன் சுயமரியாதை திருமணம் நடத்தவில்லை? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    திமுக பொதுச்செயலாளராக இருப்பவர் துரை முருகன். இவரது மகன் கதிர் ஆனந்த். வேலூர் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். கதிர் ஆனந்த் மகளின் பெயர் செந்தாமரை.

    Advertisement

    செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமண வரவேற்பு அக்டோபர் 31ம் தேதியிலும், அதன்பிறகு நவம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது.

    முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த திருமணம் புரோகிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்து முடிந்தது. இதுதான் சர்ச்சையை கிளப்பியது.

    திமுகவினர் பெரியாரிய கொள்கையை கடைப்பிடிப்பவர்கள். இதனால் துரைமுருகன் தனது பேத்திக்கு சுயமரியாதை திருமணம் தான் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் புரோகிதர்கள் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பேத்திக்கு திருமணம் நடத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. திராவிட கழகத்தின் தலைவர் கீ வீரமணி உள்பட பிற பெரியாரிய இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்த திருமணத்தை கண்டித்து இருந்தனர்.

    Advertisement

    இந்நிலையில் தான் தனது பேத்திக்கு எதற்காக சுயமரியாதை திருமணம் நடத்தவில்லை. வைதீக முறைப்படி திருமணம் நடத்தியது ஏன்? என்பது பற்றி துரைமுருகன் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.இதுதொடர்பாக துரைமுருகன் கூறியுள்ளதாவது:

    "அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாக கூறினார். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். வைதீக முறைப்படியே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பேத்தியின் திருமணம் நடைபெற்றது.

    எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இவ்வைதீக முறை திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம்" என கூறியுள்ளார்.

    English Summary

    Duraimurugan explained about his grand daughter wedding and seeks regret. Granddaughter of DMK General Secretary Duraimurugan, took place recently in Chennai. The ceremony was conducted amidst the chanting of Vedic mantras. Given that the DMK follows the principles of Periyar—which advocate for 'self-respect' (secular/rationalist) marriages—Periyar-affiliated organizations expressed strong opposition to the manner in which this wedding was held.