OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு

  • சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதிமுகவில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகளை வளைக்க தவெகவும் - திமுகவும் தயாராகி வருகின்றன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணியை திமுகவில் இணைய பேச்சு நடத்தி வருகிறார்களாம்.

    Advertisement

    தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமல்லாமல், அதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகார மோதல்களும் அதிமுகவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளன.

    Advertisement

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து சில மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் சமரச முயற்சிகள் நடந்தாலும், அனைவரும் முழுமையாக ஒரே அணியில் செயல்படுகிறார்களா என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது.

    அதிமுக மோதல்

    கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி பல நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சிலருக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், முக்கியமான சில தலைவர்கள் இன்னும் முழுமையாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணியும், நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணியும், விழுப்புரத்தில் சி.வி. சண்முகமும் அண்மைக்காலமாக கட்சி நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்கவில்லை என்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    திமுக

    இதனால், இந்த தலைவர்கள் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசித்து வருகிறார்கள் என்ற பேச்சு மீண்டும் வலுப்பெற்றுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வலுவான அமைப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகள் தேர்தல் அரசியலில் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

    எஸ் பி வேலுமணி

    இந்த பகுதிகளில் கட்சியை வலுவாக உருவாக்கினால் வரும் தேர்தல்களில் கூடுதல் பலன் கிடைக்கும் என திமுக கணக்கிடுகிறது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் தனிப்பட்ட ஆதரவு வட்டத்தைக் கொண்டுள்ள எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி போன்ற தலைவர்களை திமுக அணுகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, திமுகவில் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் எஸ்.பி. வேலுமணிக்கு கோவை மண்டல பொறுப்பும், தங்கமணிக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கான முக்கிய பொறுப்பும் வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    Advertisement

    தங்கமணி

    ஆனால் இந்த தகவல்களுக்கு எந்த தரப்பிலும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. திமுக தலைமையும் இதுகுறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அதேபோல், வேலுமணி அல்லது தங்கமணி தரப்பிலும் இதுகுறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்படவில்லை. கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் பெரும் பலம் கொண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினால் அதன் தாக்கம் பெரியதாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    கொங்கு மண்டலம்

    இதனால் இந்த தகவல்கள் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இதுவரை இருவரும் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவிக்காத நிலையில், கொங்கில் வெளியாகும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போதைய சூழலில் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் அதிமுகவிலேயே தொடர்கிறார்களா அல்லது திமுகவில் இணையும் முடிவை எடுக்கிறார்களா என்பது தெளிவாக தெரியவில்லை என்கின்றனர் அவர்களது ஆதரவாளர்கள்.

    English Summary

    Speculation grows over DMK’s outreach to Velumani and Thangamani as AIADMK faces continuing internal tensions.