வைகோவால் பெரிய சிக்கல்.. முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் திமுக புகார்

  • சென்னை: சென்னை: முதல்வர் விஜய்யே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி 7 பக்க புகார் கடிதம் அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கருத்தை புகாரில் சுட்டிக்காட்டிய அவர், விஜய் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகின்றன. இதனை எதிக்கட்சிகளான திமுக விஜய் அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்தது.

    Advertisement

    வைகோவை ஒத்துக்கொண்டுள்ளார்

    இந்த நிலையில் தான் சமீபத்தில் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அப்போது பேசிய வைகோ, ராஜினாமா செய்தால், உங்கள் 2 உறுப்பினர்களை வெல்ல வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறினார். வைகோவின் இந்த கருத்தை வைத்து திமுக மீண்டும் விஜய் மீது குற்றம் சாட்டியது. விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோவை ஒத்துக்கொண்டுள்ளார் எனவும் குற்றம்சாட்டியது.

    இந்த நிலையில் தான் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

    Advertisement

    வீடியோவுடன் ஆளுநருக்கு புகார் கடிதம்!

    இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

    இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். வைகோ பேசியது குறித்து வீடியோ காட்சிகளையும் அதனுடன் சேர்த்து கடிதமாக அனுப்பியுள்ளார். மொத்தம் 7 பக்கத்திற்கு அந்த கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது. வைகோ கூறியதை வைத்து பார்க்கும் போது விஜய்யே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.

    Advertisement

    விஜய் உத்தரவாதம் அளித்தார்

    சென்னையில் நடந்த மதிமுகவின் பொதுக்குழு மற்றும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. எதிர்கால தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேர்தல் நேரத்தில் மதிமுக வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்யலாமே என்று தவெக தரப்பில் பேசினர். ஆனால் நான் வாய்ப்பு இல்லை என சொன்னேன்..

    2 உறுப்பினர்களை வெல்ல வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்" என்று பேசினார். வைகோவின் இந்த பேச்சை வைத்து திமுகவினர் அப்போதே விஜய் நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்நிலையில் தான் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆளுநர் அர்லேக்கர் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு 7 பக்க கடிதத்தினை அனுப்பியுள்ளார்.

    English Summary

    DMK has lodged a complaint with the Governor and the Directorate of Vigilance and Anti-Corruption, alleging that Chief Minister Vijay was involved in horse-trading. The party has sought registration of a case and legal action, citing remarks allegedly made by MDMK General Secretary Vaiko.