உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ

  • சென்னை: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தங்களை நிர்பந்தித்ததாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    திமுக கூட்டணியில் நீடிக்குமா? அல்லது விஜய்யின் தவெகவுடன் இணையப் போகிறதா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் பரவி வரும் நிலையில் எந்த ஒரு பெரிய முடிவும் நாங்கள் எடுக்கவில்லை என்றும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    Advertisement

    திமுகவால் தான் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்

    நீங்களா ஒரு கற்பனை செய்யக்கூடாது.. நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று, அனைத்து தொகுதிகளிலும் தங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து போராடி பணியாற்றினோம். 34 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்தேன். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 1 மணி நேரம் எனது உணர்ச்சிகளை கொட்டி திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு வாக்கு சேகரித்தேன். இதில் 24 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.

    திமுகவின் ஆதரவால் தான், அவர்களது வாக்குகளால் தான் மதிமுகவில் இரண்டு எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 2 தொகுதிகளில் தோல்வியும் பெற்றிருக்கிறோம். இந்த வெற்றியில் எங்களது பங்கும் சிறிது உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெறவும் நாங்கள் உதவியாக இருந்து இருக்கிறோம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

    Advertisement

    மற்ற கட்சிகளுக்கு அதிக சீட்

    ஆனால் மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அதிக இடங்கள் கொடுக்கப்பட்டது. கட்சிகள் பெயரை சொல்லி யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒரு கட்சிக்கு 27 இடங்கள் மற்றும் ராஜ்ய சபா, ஒரு கட்சிக்கு 8 இடங்கள், ஒரு கட்சிக்கு பத்து இடம் ஒரு ராஜ்யசபா, மற்ற கட்சிகளுக்கு 5 இடங்கள், முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டும் குறைவான இடம். எங்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கினார்கள். இது எங்கள் தொண்டர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. எங்கள் தொண்டர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனை தான் நான் அன்றைக்கே கூறியிருந்தேன்.

    Advertisement

    அதிலும் அவர்கள் விரும்பும் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம். ஒரு தொகுதியில் மட்டும் எங்கள் சின்னத்தில் போட்டியிட நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் இறுதியில் அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லிவிட்டனர். அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது. திமுகவோடு சேர்ந்து போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் இப்போது அமைச்சரவையில் பங்கேற்று விட்டது. 10 இடத்தில் போட்டியிட்ட ஒரு கட்சியும் ஒருஇடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அவர்கள் கூட தனி சின்னத்தில் தான் போட்டியிட்டார்கள்.

    இப்படிப்பட்ட சூழலில் தான் அவர் நாமும் தனிச் சின்னத்தில் போட்டி இட்டு இருக்கலாம் என்ற மன வேதனையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான் இதை பெரிதாக எடுக்கவில்லை. நீங்கள் கேட்டதால் சொல்லியிருக்கிறேன். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என எல்லாத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு எடுப்போம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். பொதுக்குழுவில் ஆறஅமர எல்லாரது கருத்துக்களையும் கேட்டும் பொறுமையாக தான் முடிவு எடுப்போம். தேர்தல் வரும்போது தான் தேர்தல் பற்றி முடிவு எடுக்க முடியும். பொதுக்குழுவில் முடிவு எடுப்போம்" என்று கூறினார்.

    English Summary

    MDMK general secretary Vaiko alleged that the DMK compelled his party to contest on the Rising Sun symbol and allocated only four seats. He said MDMK has not taken any decision yet and will decide its future political course at the June 27 general council meeting.