லம்ப் அமவுண்டை ஆட்டைய போட்ட திமுக புள்ளி.. பள்ளி அங்கீகார ஊழலில் தலைமறைவான ’மாஜி’! பரபர விசாரணை

  • சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, கட்டிடத் திட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை விரைவாக பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    பள்ளி அங்கீகார ஊழல்

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    முன்னாள் எம்எல்ஏ

    இந்த மோசடி வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அந்த முன்னாள் எம்எல்ஏவை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    தனியார் பள்ளி

    மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிதல், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தல் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேகரித்தல் உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விசாரணை விரிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    Advertisement

    ரூ.200 கோடி

    போலீஸார் நடத்திய விசாரணையில், பல்வேறு பள்ளிகளிடம் இருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்டும் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

    மத்திய குற்றப்பிரிவு

    மேலும், மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட பள்ளிகளின் முழுமையான பட்டியலை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகியோ, தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    தீவிர விசாரணை

    புகார் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார். மேலும் பலர் புகார் அளிக்க முன்வரக்கூடும் என்பதால், இந்த வழக்கின் விசாரணை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    School approval scam probe expands as police investigate alleged ₹200 crore fraud involving private schools across Tamil Nadu.