DMK: இடைத்தேர்தல்! தனித்து போட்டியிட்டு மிரட்டும் திமுக! கூட்டணியே இல்லாமல் மாஸ் காட்டும் உதயசூரியன்!

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதி திமுக யாருடனுடன் கூட்டணி வைக்காமலேயே கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இதுநாள் வரை கூட்டணி கட்சிகளின் பலத்தாலேயே திமுக வென்றது என்ற விமர்சனத்தை நொறுக்கியுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பரந்தாமன், 2ஆவது இடத்தில் இருந்து வருகிறார். அது போல் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா 3ஆவது இடத்தில் உள்ளார்.

    Advertisement

    இப்படி இரு தொகுதிகளிலும் திமுக இரண்டு, மூன்றாவது இடங்களில் இருந்தாலும் முன்னிலை வகிப்பவர்கள் பெற்ற வாக்குகளைவிட திமுக அதிக வித்தியாசத்தில் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே துரத்திக் கொண்டே செல்கிறது.

    தவெக ஆட்சிக்கு வந்தது

    தவெக ஆட்சிக்கு வந்தது முதல் விஜய் கொளத்தூர் சென்றதால் கொத்து பரோட்டா போட்டுவிட்டார், சேப்பாக்கம் தொகுதிக்கும் அவரை அழைத்துச் சென்றிருந்தால் உதயநிதியும் தோற்றிருப்பார் என்றும், உதயநிதி உள்பட திமுகவினர் கடந்த தேர்தலில் வென்றதற்கு காரணமே கூட்டணி கட்சியினரின் வாக்குகளால்தான் என்றும் தவெக அமைச்சர்கள் சதா சர்வகாலமும் விமர்சித்து வந்தனர்.

    Advertisement

    திமுக தனித்து போட்டியிட்டு

    ஆனால் இந்த முறை திமுக தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் இதுவரை நடந்த சுற்றுகளில் திமுக நல்லதொரு வாக்குகளை பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் தவெக 23668, திமுக 15670, அதிமுக 14345 வாக்குகளை பெற்றுள்ளது. இங்கு தவெகவுக்கும் திமுகவுக்கும் அதிக அளவிலான வாக்கு வித்தியாசம் இருந்த போதிலும் திமுக துரத்திக் கொண்டே போகிறது. தற்போது வரை 6 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. எனவே இன்னும் 15 சுற்றுகள் முடிவில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

    தாராபுரம்

    தாராபுரத்தில் தவெக 16201, அதிமுக,- 14807, திமுக 13797 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் அதிக அளவு வித்தியாசம் இல்லை. ஆனால் தவெக அப்படியில்லை, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் களமிறங்கியது.

    Advertisement

    திமுக தனித்து களமிறங்கி

    ஆனால் திமுக தனித்து களமிறங்கி சொந்த வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டது. கூட்டணி பலத்தை மட்டுமே திமுக நம்பியிருக்கவில்லை என்பதையும் 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு வலுவான அடிப்படை கட்டமைப்பு இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது.

    பேச்சுவார்த்தை

    இதனால் இனி வரவிருக்கும் தேர்தல்களில் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது திமுக பேரம் பேசுவதற்கும் வசதியாக இருக்கும். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்துவிட்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அணி மாறி துரோகம் செய்த கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடலாம் என்ற நம்பிக்கையை திமுக பெற்றுவிட்டது என சொல்லலாம்.

    Advertisement

    5 தொகுதிகள்

    இனி வரும் மற்ற 5 இடைத்தேர்தல்களிலும் திமுக உற்சாகத்துடன் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். சேப்பாக்கத்தில் உதயநிதியே கூட்டணி கட்சிகளின் பலத்தால்தான் வென்றுள்ளார்கள் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் திமுக தங்களது பலம் என்ன என்பதை நிரூபித்துவிட்டது. அதிலும் மதுராந்தகத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெளியூர்காரராக இருக்கும் போதிலும் அவருக்கு 2ஆவது இடம் கிடைத்திருக்கிறது என்றால் மொத்த ஓட்டும் உதயசூரியனுக்கு கிடைத்தது ஆகும். இவ்வாறு திமுகவின் கை ஓங்கி இருப்பது ஏற்கெனவே தங்களுடன் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதிலும் குறிப்பாக காங்கிரஸ், ஐயூஎல்எல், விசிக! ஏனெனில் இந்த கட்சியினர்தான் கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையிலும் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

    Advertisement

    கடந்த 2026 சட்டசபை தேர்தலில் தாராபுரத்தில் திமுக 64,373 வாக்குகள் பெற்று 2ஆவது இடம் பெற்றது. அது போல் மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3ஆவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.