‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்!


  • சென்னை: திமுக ஐடி விங் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திமுகவின் தோல்விக்கு ஐடி விங் நிர்வாகிகள் இன்ஸ்டாகிராம் அல்காரிதங்களை புரிந்து கொள்ளாததும் ஒரு காரணமாக சொல்லப்படும் நிலையில், தவெகவின் இன்ஸ்டாகிராம் அரசியலை திமுக கடைசி நேரத்தில் கூட கணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி (DMK IT Wing) மாநிலச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா தனது பொறுப்பில் இருந்து நீக்கப்படக் கூடும் என்ற பரபரப்பான தகவல் அறிவாலய வட்டாரங்களில் இருந்து கசிந்து வருகிறது.

    Advertisement

    தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆய்வு செய்து வரும் நிலையில், ஐடி விங்கின் செயல்பாடுகள் மற்றும் சமூக ஊடக உத்திகள் மீதான கடுமையான அதிருப்தியே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. திமுகவின் பின்னடைவுக்கு, அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் தொழில்நுட்ப அல்காரிதங்களை சரியாகப் புரிந்து கொள்ளாததே முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    எக்ஸ் மற்றும் பேஸ்புக் தளங்களில் மட்டுமே கவனம் செலுத்திய திமுக ஐடி விங், இளம் வாக்காளர்களைப் பெருமளவில் கவர்ந்து வைத்துள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் அதன் அல்காரிதம்கள் வேலை செய்யும் விதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. நவீன டிஜிட்டல் ட்ரெண்டுகளுக்கு ஏற்ப வியூகங்களை உடனுக்குடன் மாற்றத் தவறி இருக்கின்றனர்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் ஆளுங்கட்சியின் சாதனைகள் மற்றும் பிரச்சாரங்கள் புதிய தலைமுறை வாக்காளர்களைச் சென்றடையவில்லை என்ற ஆதங்கம் கட்சிக்குள் எழுந்துள்ளது. சமூக ஊடகக் களத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தொய்வைத் தொடர்ந்து, ஐடி விங்கிற்குப் புத்துயிர் ஊட்ட தற்போதைய பொறுப்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை மாற்றிவிட்டு, புதியவரை நியமிக்க ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

    தமிழக அரசியல் களத்தில் பிரதான சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் பிரச்சார உத்திகளை திமுக ஐடி விங் கடைசி நிமிடம் வரை கணிக்கவே இல்லை என்ற கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால், திமுக ஐடி விங்கில் மிக விரைவில் தலைமை மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

    English Summary

    DMK IT Wing Shake-up: TRB Rajaa Likely to Be Removed Over Failure to Decode TVK's Instagram Algorithm Strategy