சென்னை: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதில் அளிப்பதாக கூறிவிட்டு முதல்வர் விஜய் அவையில் இருந்து வெளியேறியதை திமுகவினர் டிரோல் செய்து வருகிறார்கள்.
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுக்கு முதல்வர் வெளிநடப்பு செய்ததாக திமுக ஐடி விங் கிண்டல் செய்து வருகிறார்கள். பொதுவாக எதிர்க்கட்சிகள்தான் நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் வெளிநடப்பு செய்யும். ஆனால் ஆளும் கட்சி வெளிநடப்பு செய்யாது. எனினும் விஜய், முதல்வர் அலுவல் பணிகள் காரணமாக எழுந்து சென்றதை வெளிநடப்பு என கூறி டிரெண்டாக்கி வருகிறார்கள்.
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 116 நாட்களில் தவெக அரசில் நடந்த கொலை, கொள்ளை, ஆணவக் கொலை, பாலியல் குற்றங்களை பட்டியலிட்டார். அது போல் தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்தார். மேலும் "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறிவிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை எதற்காக இந்த ஆட்சியில் தமிழக டிஜிபியாக நியமித்தீர்கள், அது போல் போதை பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அமல்ராஜை ஏன் சென்னை கமிஷனராக்கினீர்கள். நாங்கள் நியமித்த அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதால்தானே அவர்களுக்கு புரமோஷன் கொடுத்தீர்கள் என உதயநிதி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் விஜய், "அனைத்து எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும். ஆனால் நான் பதிலளிக்கும் போது யாரும் எந்திரிச்சு ஓட கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும்" என கூறிவிட்டு விஜய் அவையை விட்டு வெளியே சென்றுவிட்டார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "எங்களை வெளியே ஓடக் கூடாது என கூறிவிட்டு தற்போது அவரே வேகமாக வெளியே ஓடிவிட்டாரே" என்றார். மேலும் உதயநிதி, "3 நாட்கள் அவைக்கு விடுமுறை. எனவே 3 நாட்கள் நன்கு தயார் செய்து கொண்டு வரட்டும். வரும் திங்கள்கிழமை அன்று எந்த திசை திருப்பலும் தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்" என உதயநிதி தெரிவித்தார். வரும் திங்கள்கிழமை முதல்வர் விஜய் எந்தமாதிரியான பதிலை அளிக்க போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் உதயநிதி, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் வேண்டுமே தவிர, மடை மாற்றுவதோ, குட்டி கதை சொல்லி திசை திருப்பவதோ கூடாது என தெரிவித்துள்ளார். வரும் 8ஆம் தேதியுடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் நிலையில் வரும் திங்கள்கிழமை அதாவது 7ஆம் தேதி சட்டசபையில் நிச்சயம் சூடான விவாதங்கள் நடைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள். இந்த நிலையில் முதல்வர் விஜய், நேற்று சட்டசபையில் இருந்து வெளியே சென்றதை திமுக ஐடி விங் கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு முதல்வர் விஜய் வெளிநடப்பு செய்கிறார் என அவர் வெளியே சென்ற படங்களை போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.