செய்றத செஞ்சுபுட்டு.. வீட்டுக்கு போய் ட்வீட்? பொம்மை முதல்வர்.. சிஎம் விஜயை விளாசிய திமுக பரந்தாமன்!

  • சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் விஜய் காட்டிய 'சைகை' கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தான் திட்டமிட்டு அவ்வாறு செய்யவில்லை என முதல்வர் விஜய் விளக்கம் அளித்து இருந்தாலும், திமுக கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்த நிலையில் "எல்லாவற்றையும் செய்து விட்டு பின்பு வீட்டுக்கு போய் 'ட்வீட்' போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையே காட்டுகிறது" என திமுக முன்னாள் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்று இருக்கிறார். தொடர்ந்து முதன்முறையாக தமிழக சட்டசபையில் பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருக்கிறது முதல்வர் விஜய் அரசு.

    Advertisement

    நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து இரு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து பல்வேறு அரசு துறைகள் ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது.

    தமிழக சட்டசபை

    கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய் எல்லாவற்றிற்கும் திங்கட்கிழமை பதில் சொல்வேன் அப்போது எதிர்கட்சிகள் வெளியே ஓடி விடக்கூடாது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    அதற்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்," ஓடக்கூடாது என சொல்லிவிட்டு முதல்வரே ஓடிப் போய்விட்டார்" என விமர்சித்தார். இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை நேற்று கூடியது. தொடர்ந்து இரண்டு அரசினர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார்.

    முதலமைச்சர் விஜய்

    அப்போது சர்க்காரியா கமிஷன் குறித்தும் திமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் அமலாக்கத்துறை அறிக்கைகளை வாசித்து காட்டினார். அது மட்டும் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் உள்ளிட்ட குறித்தும் பேசினார். அப்போது மிசா குறித்து பேசிய முதல்வர் விஜய் ஒரு சைகை ஒன்றை காட்டினார்.

    Advertisement

    அமலாக்கத்துறை

    இந்த சைகை முன்னாள் முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போல் இருப்பதாகவும் உருவ கேலி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இன்று சட்டசபை கடைசி நாள் நிகழ்வின் போதும் இந்த விவகாரத்தை முன்னெடுத்த திமுக உறுப்பினர்கள் முதல்வரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அமலாக்கத்துறை அறிக்கையைத் தான் முதல்வர் படித்தார் எனவும், முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் பேசினார்.

    திமுக

    தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதற்கிடையே தனது சைகை குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் முதல்வர் விஜய். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள் அவர்," சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறியிருந்தார்.

    Advertisement

    உடல் மொழி

    இந்த நிலையில் முதல்வரின் விளக்கம் குறித்து விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை! உரையாற்றுவது தான் உங்கள் வேலை மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே! எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் #tweet போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.

    திமுக பரந்தாமன்

    முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள். எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள்.

    Advertisement

    சட்டமன்ற மாண்பு

    உழைப்பைத் தந்து, தியாகத்தை தந்து இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள். ஊதாரித்தனமான வசனங்கள் பேசி வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.

    சட்டமன்ற நடவடிக்கைகள்

    காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப்படைத்த முதல்வர் தாங்கள். எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள். எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்" எனக் கூறியுள்ளார்.

    English Summary

    DMK leader Parandhaman criticized CM Vijay’s Assembly gesture and X post, accusing him of lowering the dignity of the Chief Minister’s office.