தவெகவிடம் இனி தோற்க கூடாது.. திமுக கையில் எடுத்த 50:50 பார்மூலா.. என்ன அது? மொத்தமாக மாறும் கட்டமைப்பு

  • சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம் திமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் தான் தமிழக அரசியலில் தவெகவிடம் இனி தோற்கக்கூடாது என்பதற்காக திமுக 50:50 என்ற பார்மூலாவை கையில் எடுத்து திமுகவின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நினைத்தார். ஆனால் தவெகவிடம், திமுக தோல்வியடைந்தது. தவெக தலைவர் விஜய் முதல்வராகிவிட்டார்.

    Advertisement

    திமுக சட்டசபை தேர்தலில் தோற்றது மட்டுமின்றி, முதல்வராக இருந்த முக ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதியில் தோற்றார். அவரையும் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வீழ்த்தினார். இதனை திமுகவினரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

    இந்த தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு இளம்பெண்கள், இளைஞர்களின் ஆதரவு அந்த கட்சிக்கு இருந்தது தான் முக்கிய காரணம். இந்நிலையில் தான் இளைஞர்கள், இளம்பெண்களின் ஆதரவுகளை பெறும் முனைப்பில் திமுக செயல்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக மாவட்ட வாரியாக கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய திமுக தலைமை தயாராகி உள்ளார்.

    Advertisement

    முதல்வர் விஜய் மற்றும் தவெகவை எதிர்கொள்ள திமுக தனது கட்சியில் 'ஜென்-ஸி இளைஞர்களுக்கும், இளைஞர் அணியை சேர்ந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பொறுப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கட்சியில் மூத்த நிர்வாகிகளை பாதிப்பு ஏற்படாமல் ஜென் - ஸி இளைஞர்களுக்கு கட்சியில் 50 சதவீதம் வரை பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் தவெகவிற்கு போட்டியாக திமுகவிற்குள் இளைய தலைமுறையினரை ஈர்க்க முடியும் என்று மேலிடம் நம்புகிறது.

    அதன்படி 50:50 பார்மூலாவை திமுக கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் கட்சியின் அமைப்பு சார்ந்த பொறுப்புகளில் 50 சதவீதம் மூத்த நிர்வாகிகளையும் 50 சதவீதம் இளைய தலைமுறையை சேர்ந்தவர்களையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் முன்னாள் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி மற்றும் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் அடங்கிய கட்சியின் மறுசீரமைப்புக் குழு பணி மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    இதுபற்றி திமுகவின் நிர்வாகிகள் கூறுகையில், ''மாநிலத்தில் மாறியுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அதிக இளம் தொண்டர்களையும் 'ஜென்-ஸி' தலைமுறையினரையும் ஈர்க்க கட்சி முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள மூத்த நிர்வாகிகளின் பொறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், 50:50 பார்மூலாவின் கீழ் சம எண்ணிக்கையிலான புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு இளம் நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது'' என்றார்.

    அதாவது திமுகவில் மாவட்டம் மற்றும் மண்டல யூனிட் (Zonal Unit) உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் இளம் தலைமுறையினருக்கு பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திமுகவின் கட்சி வட்டாரத்திடம் கேட்டபோது ''தற்போது கட்சியில் அமைப்பு ரீதியாக மொத்தம் 75 யூனிட்டுகள் உள்ளன. இதன் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன்மூலம் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்க முடியும். அதேபோல் கட்சியில் மாவட்டங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மூத்த நிர்வாகிகளை பாதிக்காமல் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும்'' என்றார்.

    தற்போது முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர். இவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இதுபற்றி ஆலோசித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    The DMK has lost the Tamil Nadu Assembly election and ceded power to Chief Minister Vijay's Tamillaga Vettri Kazhagam (TVK). Against this backdrop, reports indicate that the DMK plans to implement a "50:50 formula" and bring about major structural changes within the party to ensure it does not face defeat against the TVK in future Tamil Nadu politics.