சென்னை: திமுக தலைமை அமைப்பில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கட்சியில் பெரும் உட்கட்சி மோதலும் அதிகாரப் போட்டியும் வெடித்துள்ளது. முக்கியமாக கட்சிக்கு உள்ளேயே கனிமொழி டீம் - உதயநிதி ஸ்டாலின் டீம் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளதாம்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்வத்தையும் மறுசீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த புதிய விதிகளால் பல மூத்த நிர்வாகிகள் தங்களின் செல்வாக்குமிக்க மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பல சீனியர்களுக்கு பதவி பறிபோகும் நிலை உள்ளது. இதனால் தலைமைக் கழகப் பதவிகளைக் கைப்பற்ற மற்ற ஜூனியர், சீனியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்த, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள் 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே இப்பதவியை வகிக்க முடியும். இதேபோல், பகுதி, நகரம், ஒன்றியம் மற்றும் வார்டு அளவிலான பொறுப்புகளுக்கும் கடுமையான வயது வரம்பும், 2 முறை மட்டுமே பதவி வகிக்கும் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அதிரடி சீர்திருத்தத்தால் பல ஆண்டுகளாக மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த முக்கியப் புள்ளிகளின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சு.முத்துசாமி, எஸ்.ரகுபதி, கே.ராமச்சந்திரன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மூத்த மாவட்டச் செயலாளர்கள் இந்த 70 வயது வரம்பால் தங்களின் பதவிகளை இழக்க நேரிடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 8 மூத்த தலைவர்கள் வகித்து வந்த மண்டலப் பொறுப்பாளர் பதவிகளையும் ரத்து செய்ய தலைமை முடிவெடுத்துள்ளது. தங்களின் சொந்த மாவட்டங்களில் பிடி தளர்ந்து வருவதால், பாதிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் முக்கியப் பொறுப்புகளைப் பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். துணைப் பொதுச் செயலாளர், முதன்மைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர் போன்ற மாநில அளவிலான பதவிகளைக் குறிவைத்து தீவிர லாபியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய முக்கியத்துவம் அல்லது பொருளாளர் போன்ற செல்வாக்குமிக்க பதவி வழங்கப்படாவிட்டால், கட்சியை விட்டு விலக நேரிடும் என மூத்த மாவட்டச் செயலாளர் ஒருவர் தனது ஆதரவாளர்களிடம் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே புதிய அதிகார மோதலை தூண்டியுள்ளது. இளைஞரணியைச் சேர்ந்த குறைந்தபட்சம் 30 பேருக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என உதயநிதி தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேநேரத்தில், மாவட்டச் செயலாளர்களை ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி வருகிறார். அதோடு தனக்கு அதிகாரம் உள்ள பதவி வழங்கப்பட வேண்டும் என்று கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாராம். இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் விரிவான ஆலோசனையும் நடத்தியுள்ளார். இந்த அதிகாரப் போட்டி சமூக வலைதளங்களிலும் எதிரொலித்துள்ளது. ஏற்கனவே திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சிலர், கனிமொழி ஆதரவாளர்களுக்குக் கட்சித் தலைமை அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராக மறைமுகமாகப் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கனிமொழியின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், கட்சியின் தகவல் தொடர்பு பிரிவிலும் விரிசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கும் மூத்த தலைவர்களின் விசுவாசத்தை தக்கவைப்பதற்கும் இடையே திமுக தலைமை தவித்து வருகிறது. முக்கிய பதவிகளை எதிர்பார்க்கும் சில சீனியர்கள் ஒருபுறம், களப் பொறுப்புகளைக் கோரும் இளைஞரணி மறுபுறம் என திமுகவில் தோன்றி உள்ள இந்த மோதல், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.110 மாவட்டங்களாகப் பிரிப்பு
பதவியை இழக்கும் 13 முக்கிய சீனியர்கள்
தலைமைக் கழகப் பதவிகளுக்குக் குவியும் லாபி
உதயநிதி - கனிமொழி அணிகளுக்கிடையே அதிகாரப் போட்டி
இருவருக்கும் இடையே மோதல்