“அமைச்சர் நாற்காலிக்காக கொள்கைகளை இப்படி மாற்றிக்கொள்ள முடியுமா?” - வன்னி அரசு மீது திமுக அட்டாக்

  • சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு பேச்சு கபடநாடகம் ஆடுவதாக திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார். "பண்ணையார் ஆட்சியில் மந்திரி ஆகியிருக்கும் வன்னி அரசு மன்னிப்பு கேட்பாரா? என கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக, திமுக அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், "மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அக்கறை காட்டுவது ஒரு நாடகம். முதலில், வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்" என சொல்லியிருக்கிறார் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.

    Advertisement

    தனக்கு நேர்ந்த அவலத்தை ரோஹித் வெமுலாவோடு ஒப்பிட்டு, கதறினார் பாரதிதாசன். ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது போன்ற துன்புறுத்தலை பாரதிதாசனுக்கு செய்துவிட்டு, வேங்கைவயலுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் வன்னி அரசு. அன்றைக்கு ரோஹித் வெமுலாவுக்கு ஆர்.எஸ்.எஸ் நடத்தியதை மறைமுக பாஜக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிற விஜய் அரசு பாரதிதாசனுக்கு இன்றைக்கு நடத்தியிருக்கிறது. இவையெல்லாம் அம்பலப்பட்டு போனதாலேயே வேங்கைவயல் என்ற விவகாரத்தை தூக்கி கொண்டு வருகிறார்.

    வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல்பூர்வ விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று தவெக அரசு கருதினால், அந்த குற்ற பத்திரிகையை திரும்ப பெற்று - மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்னிஅரசு குற்றஞ்சாட்டும் நபர்களை கைது செய்து விசாரிக்கட்டும்! அதை யார் தடுத்தது?

    Advertisement

    அமைச்சராக இருந்து கொண்டு, அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, தவெக பாணி பழிபோடும் அரசியலை வன்னிஅரசு செய்வது சந்தர்ப்பவாதம்! மறுவிசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் நேர்மை வன்னி அரசிடம் இருக்கிறதா?

    வேங்கைவயல் விவகாரத்தில் திமுக ஒருதலைபட்சமாக செயல்பட்டது என்றால், எப்படி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வன்னி அரசுக்கு அது ஒரு பிரச்சனையாக தெரியவில்லை? விசிக, திமுக கூட்டணியில் எப்படி தொடர்ந்தது? என வன்னி அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

    "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர் மு.க.ஸ்டாலின்தான். ஆட்சியில் இருந்துகொண்டே சனாதனத்திற்கு எதிராக செயல்படுகிறார்'' எனப் பாராட்டு பத்திரம் வாசித்தவர்தான் வன்னி அரசு.

    Advertisement

    இன்று அமைச்சராக வன்னி அரசு சட்டமன்றத்தில் மோடி, அமித் ஷா பெயரை உச்சரித்த போது அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சி யாரென்று வன்னி அரசுக்கு இப்போது தெரிந்திருக்குமே! 'கொள்கை எதிரி' என சொல்லிக் கொண்டே அந்த எதிரியோடு மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய் அரசுக்கு வெண்சாமரம் வீசும் வன்னி அரசு மந்திரி பதவியை ஏற்று கொண்டதற்காக மன்னிப்பு கேட்பாரா?

    விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் துள்ள துடிக்க இறந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சென்னைக்கு அழைத்து சந்தித்ததை "அருவருப்பின் உச்சம். கவர்ச்சி திமிர். பண்ணையார்கள் கூட இந்த அருவருப்பைச் செய்ததில்லை'' என வன்னி அரசு கடுமையாக விமர்சித்தார். அந்த பண்ணையார்கள் ஆட்சியில்தானே மந்திரியாக வலம் வருகிறோமே என வெட்கப்பட மாட்டீர்களா? அப்படி பேசியதற்காக எங்காவது நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா? மந்திரி நாற்காலிக்காக தனது கொள்கைகளையும் பேச்சுகளையும் இவ்வளவு சீக்கிரமாக மாற்றி கொள்ள முடியுமா? என்ற கேள்வியை வன்னி அரசை பார்த்துத்தான் மக்கள் கேட்பார்கள்.

    Advertisement

    'சந்தர்ப்பவாத அரசியல்' 'பிழைப்புவாத அரசியல்' எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைவிடக் கேவலமான 'அரசியல் வியாபாரவாதம்' என்ற புதுத் தியரியை அல்லவா உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பட்டியலின மக்களின் உரிமைகளை இன்றைக்கு அதிகாரத்திற்காகவும், அமைச்சர் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் அடகு வைக்க துணிந்துவிட்டார் வன்னி அரசு.

    விஜய் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச பாடல்கள் அதிகம் என்றெல்லாம் முழங்கிய நாக்கு, இன்று அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டு மாற்றி சுழல்கிறது! "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா..." என்ற விஜய் பாடலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் விமர்சித்த வன்னி அரசுதான், அமைச்சர் நாற்காலி கிடைத்ததும் "சேரி இல்லா ஊருக்குள்ள.. பொறக்க வேணும் பேர புள்ள'' என மாற்றி பாடுகிறார். விஜய்யை விட பிரமாதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார் வன்னி அரசு.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வென்று எம்.எல்.ஏ ஆகி, ஆள் காட்டி விரலின் அடையாள மை அழிவதற்கு முன்பே விஜய் ஆட்சியில் போய் ஒட்டிக் கொண்டு அமைச்சர் ஆனீர்களே. அதற்காக நீங்கள் முதலில் மன்னிப்பு கேளுங்கள்." எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former DMK Minister Govi. Chezhian has criticized Minister Vanniyarasu's remarks regarding the Vengaivayal incident, describing them as a charade. Chezhian questioned whether Vanniyarasu—who became a minister under the 'Pannaiyar' regime—would offer an apology.