சென்னை: முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், விசாரணையின் போது தன்னை போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கைது செய்யப்பட்டு தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 11 மணி நேர விசாரணைக்கு பின் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் போலீசார் தன்னை தாக்க முயற்சித்ததாகவும், துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டியதாகவும் மார்க்கண்டேயன் கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அவதூறு வழக்கில் இதற்கு முன்னர் இப்படி அதிரடி கைது நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ளப்பட்டது கிடையாது. ஆனால், தவெக ஆட்சியில், கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன என்று அரசியல் விமர்சகள் குற்றம்சாட்டி வந்தனர். இப்படி இருக்கையில்.. சில நாட்களுக்கு முன்னர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இது குறித்து தூத்துககுடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் தாள முத்துநகர் வழக்கறிஞர் விஜி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட் குற்றப்பிரிவு-1, குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி, மார்க்கண்டேயன் மீது U/S 351(3), 352,353(2) BNS ஆகிய பிரிவுளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை அவரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் விசாரணைக்காக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு 11 மணி நேர விசாரணை நடைபெற்றது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, தொடர்ந்து தூத்துக்குடி ஜேஎம் கோர்ட் 1ல் குற்றவியல் நீதித்துறை நடுவர் சுமதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.அடுத்தடுத்து கைதாகும் திமுக எம்எல்ஏக்கள்
அவதூறு பேச்சு
11 மணி நேர விசாரணை