விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது.. 'சட்டசபைக்கு வா' விஜய்யை விமர்சித்ததால் நடவடிக்கை

  • சென்னை: முதல்வர் விஜய்யை பற்றி ஒருமையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியிருந்த நிலையில், விளாத்திகுளம் போலீசார் அவரது வீட்டுக்கே சென்று கைது செய்துள்ளனர்.

    Advertisement

    விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் நேற்று கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசினார். முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

    Advertisement

    திமுக எம்.எல்.ஏ கைது

    இவரது பேச்சுக்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வர் விஜய்க்கு எதிராக பேசியதால் போலீசிலும் புகார் அளித்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

    மார்க்கண்டேயன் பேசியது என்ன?

    மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை.

    Advertisement

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பாரிலானுங் கெடும் என்பதற்கு இணங்க 5 சதவீத வாக்குகளை கூட பெற முடியாமல் நடிகர் விஜய்யும் தோற்று அவரது கட்சியும் தோற்று போகும். மக்கள் மத்தியில் வாக்கு வாங்க முடியாது. உலகத்தில் பிரசித்தி பெற்ற தலைவரை.. காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறார்.

    நாசுக்காகத்தான் தலைவர் கூறினார்

    காமராஜரை பெ. சீனிவாசன் தோற்கடித்த போது படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் தோற்கடித்தார் என்று சொன்ன போது, அண்னா சொன்னார்.. படிக்காத காமராஜர் கட்டி வைத்த பள்ளியில் படித்ததினால் பெ. சீனிவாசன் வெற்றி பெற்றார் என்று கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவிற்கு சோதனைகள் கொடுத்தாலும் கூட ஜெயலலிதா தோற்று போன போது கூட.. யானையின் காதுக்குள் சென்ற சிறு எறும்பு என்று நாசுக்காகத்தான் தலைவர் கூறினார்.

    Advertisement

    ஆனால், சட்டமன்றத்தில் உன் தகப்பனாரை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறாரே" என்று மிகவும் காட்டமாக ஒருமையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் எழுந்தது.

    முன்னதாக அனிதா ராதாகிருஷ்ணன்

    ஏற்கனவே முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்னனை கடந்த சில நாட்களுக்கு முன்பாக போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில்தான், முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக கூறி மேலும் ஒரு எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    Advertisement

    மார்க்கண்டேயனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபப்டுவார் என்று தெரிகிறது. விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    DMK MLA Markandeyan Arrested: Vilathikulam police arrested DMK MLA Markandeyan after he allegedly made controversial and defamatory remarks against Chief Minister Vijay. The action follows complaints over his speech, triggering fresh political controversy between the ruling party and the opposition.