எழுதி வச்சுக்கோங்க.. ஏதோ ஒரு ரூபத்தில் சேருவார்கள்.. திமுகவின் ஒரே புகலிடம் பாஜக: பிரபலம் பொளேர்

  • சென்னை: "திமுகவுக்கு இருக்கும் ஒரே புகலிடம் பாஜகதான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஏதோ ஒரு ரூபத்தில் அவர்கள் பாஜகவுடன் சென்று சேருவார்கள். மத்திய அமைச்சரவையில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

    Advertisement

    News Pics Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மணி, "Delimitation எனப்படும் தொகுதி மறுவரையறை மசோதா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ளது.. இந்த மசோதாவில் திமுக மத்திய பாஜக அரசை ஆதரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தேசிய ஊடகங்களில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

    Advertisement

    பாஜக பக்கம் திமுக?

    குறிப்பாக, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் மூத்த திமுக எம்பி ஒருவர், "தொகுதி மறுவரையறை மசோதாவில் மத்திய அரசுடன் பொதுவாக எங்களுக்கு உடன்பாடுதான் இருக்கிறது" என்று சொன்னதாக \ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

    இங்கே காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இந்த மசோதாவை திட்டவட்டமாக எதிர்ப்பதாக தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார்கள். ஆனால் திமுகவோ, "மசோதாவின் சாராம்சத்தைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் முடிவெடுப்போம்" என்று சொல்கிறார்கள். இது அப்பட்டமான ஒரு தப்பித்தல் போக்கு. உண்மையிலேயே இது திமுக மெல்ல மெல்ல பாஜகவை நோக்கி நகர்வதற்கான மிகத் தெளிவான அறிகுறிதான்.

    Advertisement

    திருச்சி சிவா அனிதா ராதாகிருஷ்ணன்

    மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் இல்லாமல் திமுகவால் இருக்க முடியாது. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பில்லை என்ற உத்தரவாதம் இருந்தால் மசோதாவை ஆதரிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என எம்பி திருச்சி சிவா சொல்கிறார். அனைத்து மாநிலங்களுக்கும் 50% சீட்டுகளை பிளாட்டாக அதிகரிப்பது போன்ற தகவல்கள் பரப்பப்பட்டாலும், சட்டப்படி அதற்கு வாய்ப்பில்லை. அமித் ஷா மற்றும் மோடியின் வாய்மொழி உத்தரவுகளை மட்டும் நம்பி முடிவெடுக்கக் கூடாது.

    50 வருடங்களுக்கு முன்பிருந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய முடியாது... முதலில் 2026-27 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே இதை அணுக வேண்டும்.

    Advertisement

    எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், அறிவு நேர்மையும் குறைந்தபட்ச மனசாட்சியும் இல்லாமல் மோடி அரசு இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. இதுதான் தற்போதைய சிக்கல்..

    இந்த முறை போதிய மெஜாரிட்டி இல்லையென்றால் அமித் ஷா இந்த மசோதாவைக் கொண்டுவர மாட்டார். மெஜாரிட்டி இல்லாமல் மசோதாவை தாக்கல் செய்து மூக்கறுபடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதனால், இந்த முறை கட்டாயம் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை திரட்டுவார்கள்.

    தொகுதி மறுவரையறை

    திமுக இதற்கு ஒத்துழைப்பு அளித்தால் பாஜகவால் இந்த மசோதாவை நிறைவேற்றிவிட முடியும். அவையிலிருந்து வெளிநடப்பு செய்தாலும்கூட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். மொத்தமுள்ள 540 உறுப்பினர்களில் 2/3 பங்கு பெரும்பான்மை பெற 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சமாஜ்வாதி கட்சியையும் அவர்கள் சம்மதிக்க வைத்தால், இந்த மசோதாவினை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

    Advertisement

    ஆனால் பாஜகவிற்கு சாதகமாக திமுக பயணிக்கிறது என்ற எண்ணம் விவரமறிந்த பொதுமக்கள் மத்தியில் மிக வலுவாக பரவத் தொடங்கிவிட்டது... தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரித்து வாக்களித்தாலும் சரி, அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தாலும் சரி... இரண்டுமே ஒன்றுதான். அது அனைவருக்கும் தெளிவாக புரிந்துவிடும்.

    ஒரே புகலிடம் பாஜக

    வெளிநடப்பு செய்வதற்கு பதிலாக நேரடியாகவே ஆதரித்துவிட்டு மத்திய அமைச்சரவையிலும் சென்று இணைந்துவிடலாம். மத்திய அமைச்சரவையிலும் திமுக இணையக்கூடும் என்றுதான் பரவலாகப் பேச்சுக்கள் வருகின்றன. திமுகவால் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது.

    இன்று விஜய்யின் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இவர்களுக்கு இருக்கும் ஒரே புகலிடம் பாஜகதான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஏதோ ஒரு ரூபத்தில் அவர்கள் பாஜகவுடன் சென்று சேருவார்கள். மத்திய அமைச்சரவையில் இணைந்தாலும் எனக்கு ஆச்சரியமில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK Moving Towards BJP? "Write It Down!" They Will Join in Some Form, Claims Senior Journalist Mani