சென்னை: இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என்று அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது என்று கூறிய கனிமொழி, சபாநாயகரிடம் இடமாற்றம் செய்ய கோரி இருந்ததால், தேநீர் விருந்தில் பங்கேற்று அதுதொடர்பாக கேட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், ராமர் கோயில் நன்கொடை விவகாரம் நடந்த ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்றியது.
நேற்று மக்களவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வந்த போது, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் வந்த பின் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு உடனடியாக தேதி குறிப்பிடாமல் மக்களவை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் இதே நிலைதான். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த சூழலில், சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து எம்பிக்களுக்கும் தேநீர் விருந்து கொடுத்தார். இதனை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் திமுக சார்பாக கனிமொழி மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றார். இதனால் திமுக, பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக பேச்சுகள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியினர் பலரும் திமுக - பாஜகவின் நெருக்கத்தை கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் என்ன சர்ச்சை இருக்கிறது. நாங்கள் இடமாற்றம் செய்ய கோரி கேட்டிருந்தோம். அதுதொடர்பாக கேட்க சென்றோம். நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை.. காங்கிரஸ் கட்சிதான் இந்தியா கூட்டணியில் இருக்கிறது.. நாங்கள் இல்லை என்று பதில் அளித்து சென்றார். கனிமொழியின் இந்த பதில் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்தியா கூட்டணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.