சென்னை: செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 9 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை கையில் வைத்து கொண்டு முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய விஜய், இந்த குற்றச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லுவார் என்றும் கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செவிலியர் ஒருவர் கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடல் 5 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி இருக்கிறார். 9 நாட்களாகியும் காணாமல் போன சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வரும் நிலையில், போலீசார் தொடர்ந்து சிறுமியை தேடி வருகின்றனர். இந்த விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.செஞ்சி சிறுமி எங்கே? பாறை இடுக்குகளில் பாயும் டிரோன்.. 9 நாளாச்சுங்க.. இன்னும் துப்பு கிடைக்கல