சென்னை: தூய சக்தினு சினிமா டயலாக் எல்லாம் பேசினீங்களே தாராபுரத்தில் ஹெலிபேட் போட்டது யார் காசில் என முதல்வர் விஜய்க்கு திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்கன்னு வாய் கிழிய சினிமா வசனம் பேசிட்டு, இன்னைக்கு உங்க கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்கு போகுறதுக்காக ஹெலிபேட் ரெடி பண்ணதெல்லாம் எந்த கணக்கு விஜய் சார்?
நீங்க சினிமாவுல சம்பாதிச்ச காசுல போடப்பட்ட ஹெலிபேடா அது.. தூய சக்தி, தூய சக்தின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வீங்களே.. இப்போ சொல்லுங்க முதல்வரே? ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்கிற வரலாற்றை மாற்றியிருக்கிறீர்கள்.. ஆம்.. தமிழ்நாட்டு மக்கள் குடிதண்ணீர் இல்லாம, மின்சாரம் இல்லாம, விலைவாசி உயர்வால அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாம கஷ்டப்படும்போது ஹெலிபேட் அமைத்து மாற்றம் தந்த வரலாற்றுப் பெருமை உங்களையே சாரும்.. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 9-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் தாராபுரத்திற்கு வந்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் முதல்வர் விஜய் தாராபுரத்தில் மாருதி நகர் முதல் மூலனூர் வரை ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். கடந்த முறை பிரச்சாரத்தின் போது சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்தில் பிரச்சாரம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தார். ஆனால் இந்த முறை சாலை மார்க்கமாக சென்றால் தாமதமாகிவிடும் என கருதிய விஜய் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக தாராபுரத்தில் இவர் ரோடு ஷோ புறப்படும் இடத்திற்கு அருகே இருந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இதற்காக நிறைய லிட்டர் கணக்கில் தண்ணீர் கொட்டப்பட்டு அந்த இடம் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. திட்டமிட்டபடி சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரத்திற்கு பயணம் செய்தார். அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் ஏறி பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். சுமார் 4 மணி நேர பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையத்திற்கு சென்ற விஜய், அங்கிருந்து விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். கோவை விமான நிலையத்தில் இருந்து தாராபுரத்திற்கு 90 கி.மீ. தூரம்தானாம். இந்த தூரத்தை கூட சாலை மார்க்கமாக கடக்காமல் ஹெலிகாப்டரில் சென்றதாக பல்வேறு அரசியல்வாதிகள் விமர்சித்திருந்தனர். இதுகுறித்து இடும்பாவனம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு மேடையேறாதது, 90 நிமிட சாலைப் பார்க்கப் பயணத்திற்கே ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது எனத் தன்னை ஒரு ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொள்ளகிறார் முதல்வர் விஜய். அம்மையார் ஜெயலலிதாவிடம் ஆணவம், அகம்பாவம், எதேச்சதிகாரப்நோக்கு எல்லாம் இருக்கும். அதையெல்லாம் தாண்டி, அந்த அம்மையாரிடம் அதீத துணிவு எப்போதும் உண்டு. அதுதான் அவருடைய தனித்துவம். அந்தத் துணிவு எல்லாம் இந்தத் தொடை நடுங்கிக்கு சுட்டுப் போட்டாலும் வராது. இவ்வாறு இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த காசுல அந்த ஹெலிபேட் போட்டீங்க?ரோம் நகரம்
மதுராந்தகம்
தாராபுரம் தேர்தல் பிரச்சாரம்
சென்னை விமான நிலையம்
ரோடு ஷோ
சென்னை டூ கோவை
90 கி.மீ. தூரம்தான்