சென்னை: திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட தாயுமானவர் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் கொண்டு சேர்க்கும் திட்டமான தாயுமனவர் திட்டத்தின் பெயரை குறிப்பிடாமல், நீலகிரி ஆட்சியை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியின் போது வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தவெக ஆட்சியில் இந்த திட்டத்தின் பெயரை மாற்றி இருக்கிறது.
ஏற்கனவே நான் முதல்வன் திட்டத்தின் பெயரை திறன் தமிழ்நாடு என்றும், முதல்வர் படைப்பகம் பெயரை படைப்பகம் என்றும், முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை காமராஜர் காலை உணவுத் திட்டம் என்றும் முதல்வர் விஜய் மாற்றி உத்தரவிட்டார். அதேபோல் மகளிர் விடியல் பேருந்து திட்டத்தின் பெயரை மகளிர் பயணம் என்றும் மாற்றியது. இதன் அடிப்படையில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில் முதல்வர் தாயுமானவர் திட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஜுலை மாத சுற்றறிக்கையில் பொது விநியோக திட்டம் என்றே கூறப்பட்டிருக்கிறது. இதனால் மீண்டும் திமுக திட்டத்தின் பெயரை விஜய் மாற்றியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் ஸ்டாலின் பெயரில் எந்த திட்டமும் இல்லாத போது, முதல்வர் விஜய் ஏன் இந்த திட்டங்களின் பெயர்களை மாற்றுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளன. குறிப்பாக முதல்வர் என்ற பெயருடன் வைக்கப்பட்ட திட்டங்களின் பெயர்கள் அடுத்தடுத்து மாற்றம் பெறுவது விவாதமாகி இருக்கிறது.