அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை?

  • சென்னை: தமிழக அரசியல் களம் எக்கச்சக்கமாக அனலடித்து கொண்டிருக்கிறது.. அதிலும் தமிழக பாஜகவுக்குள் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், அந்த கட்சியின் டெல்லி மேலிடத்தை அப்படியே உலுக்கிப் போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ,இந்நிலையில்தான், மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அமித் ஷா என்ன பேசினார் தெரியுமா?

    Advertisement

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 28 தொகுதிகளில் களம் கண்டது பாஜக. எப்படியும் பெரிய அளவில் சாதித்து விடலாம் என்று கணக்குப் போட்ட டெல்லிக்கு, தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

    Advertisement

    ஒரே ஒரு தொகுதியில் பாஜக வெற்றி

    போட்டியிட்ட 28 இடங்களில், வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. கட்சியின் மிக முக்கிய முகங்களான நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் என முன்னணி தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினார்கள். கடந்த காலங்களைப் போல இல்லாமல் தனித்து களம் கண்டதாலும், எதிர்பார்த்த வாக்கு வங்கியைத் தக்கவைக்க முடியாததாலும் பெரும்பாலான தொகுதிகளில் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்தது.

    இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், தமிழகத்தில் பல காலமாகவே வேரூன்றியிருக்கும் திமுக மற்றும் அதிமுகவின் நீண்ட கால சமூக நலத் திட்டங்களும், திராவிட சித்தாந்த தாக்கமும்தான் முக்கிய தடையாக இருந்திருக்கின்றன.

    Advertisement

    தேர்தல் தோல்வி தந்த ரணம்

    இந்த அரசியல் சூழலை தாண்டி, பாஜகவின் தேசிய அளவிலான கொள்கைகளை தமிழக மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இந்த தேர்தல் தோல்வி தந்த ரணம் மாறுவதற்குள், கட்சிக்குள் உட்கட்சி பூசல்களும், மூத்த தலைவர்கள் சிலரின் பதவி விலகல்களும் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ரொம்பவே சோர்வடைந்து போயினர்.

    இதன்காரணமாக மாநிலத் தலைமைக்கு அண்ணாமலை மீண்டும் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் கசிந்தன. ஆனால், அரசியல் களம் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தைச் சந்தித்தது. பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி திடீரென தனியாக ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார்.

    Advertisement

    அண்ணாமலை தந்த ஷாக்

    அதுமட்டுமன்றி, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர், குறிப்பாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள், அண்ணாமலைக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். இது தமிழக பாஜகவினர் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அண்ணாமலை புதிய கட்சி தொடங்கியது எந்த அளவுக்கு பாஜகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்தும் அலசி ஆராயப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக பாஜகவில் மாற்றம்? புதிய தலைமை?

    இந்த ஆலோசனையின் விளைவாக, தமிழக பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி முதல் முக்கிய நிர்வாகிகள் வரை பலரை அதிரடியாக மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி, தமிழக பாஜகவில் ஒரு பெரிய மறுசீரமைப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் தவெக பெற்றுள்ள வெற்றியை டெல்லி மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது அண்ணாமலையும் தனியாகச் சென்று, பாஜாகவின் நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுத்து வருவது கட்சிக்குக் கூடுதல் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    புதிய தலைவர் யார்

    எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளுங்கட்சியான திமுகவும் ஒரு பெரிய தலைவலியாக உருவெடுத்து நிற்கிறது. இந்த மும்முனை சவால்களையும், நெருக்கடிகளையும் தமிழக பாஜக வரும் நாட்களில் எப்படிச் சமாளிக்கப் போகிறது, டெல்லியின் வியூகம் கை கொடுக்குமா தெரியவில்லை.. , விரைவில் தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.

    தற்போது பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளராக இருக்கும் ராம சீனிவாசன், புதிய மாநிலத் தலைவர் பதவியை கேட்டுள்ளதாக தெரிகிறது, மற்றொருபக்கம் வானதி சீனிவாசன் பெயரையும் சிலர் பரிந்துரைத்துள்ளார்களாம்.. அதேபோல வினோஜ் பி. செல்வமும் வாய்ப்பு கேட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், மேலிடம் என்ன முடிவெடுக்க போகிறது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

    English Summary

    DMK on one side.. Annamalai on another.. TVK too in the mix.. Is this the change coming inside BJP? Can the Lotus survive?