ஓங்குது உதயநிதியின் கை.. மா.செ.க்கள் ஆதிக்கத்துக்கு ஆப்பு! தொகுதி செயலாளர்களை நியமிக்கும் ஸ்டாலின்?

  • சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவை மறு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லாத நிலையில் தோல்விக்கான காரணங்களை ஆராய அந்த கட்சி தீவிரமாக பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொகுதி செயலாளர் என்ற புதிய பொறுப்பை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவற்றில் இளைஞரணிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் உதயநிதியின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு திமுகவை மறு சீரமைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார் அந்த கட்சியின் தலைவரான முக ஸ்டாலின். ஏற்கனவே தமிழகம் முழுவதும் திமுக களஆய்வு குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பல்வேறு குற்றச்சாட்டுகளை கட்சியினர் சொல்லியிருக்கும் நிலையில் தோல்விக்கு, மாவட்ட செயலாளர்கள் தான் பல மாவட்டங்களில் தோல்விக்கு காரணம் என்ற புகார் தலைமைக்கு பறந்திருந்துள்ளது. குறிப்பாக மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை அந்த கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    திமுக மறுசீரமைப்பு

    மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பலம் பொருந்திய அமைச்சர்களும் படுதோல்வியை சந்தித்தனர். இதை அடுத்து தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்த திமுக தலைமை கள ஆய்வு குழுக்களை அமைத்தது. தொடர்ந்து மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் அந்த குழு ஆய்வு மேற்கொண்டது. கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பல தரப்பினரை நேரில் சந்தித்து கருத்துக்களை சேகரித்தனர்.

    Advertisement

    மு.க. ஸ்டாலின்

    இதனைத் தொடர்ந்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையை கவனமாக படித்துப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியை மறு சீரமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். எந்தெந்த இடங்களில் கட்சி பலவீனமாக இருந்தது,எந்தெந்த நிர்வாகிகள் செயல்பாடுகள் குறைவாக இருந்தது, கூட்டணி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்ட வருவதாக சொல்லப்படுகிறது.

    மறுசீரமைப்பு குழு

    இதை அடுத்து திமுக சார்பில் மறுசீரமைப்பு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட வாரியாக அறிக்கைகள் பெறப்பட்டு கட்சியை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாக சொல்கின்றனர். இந்த நிலையில் திமுகவில் மாவட்ட செயலாளர்களே அந்தந்த மாவட்டங்களில் மிகப்பெரிய அதிகாரம் மையங்களாக செயல்பட்டதும். வேட்பாளர் தேர்வு முதல் நிர்வாகம் வரை பெரும்பாலான முடிவுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது கள ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    இதனால், அவர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தனித்தனி நிர்வாகிகளை நியமிக்கும் வகையில் தொகுதி செயலாளர் என்ற புதிய பொறுப்பை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை திமுகவின் இளைஞர் அணியின் உதயநிதி ஸ்டாலின் முன் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் அவர் தமிழகம் திரும்பிய பிறகு இது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள்

    மேலும் கட்சி தாவல் நடவடிக்கைகளும் அதிகரித்து இருப்பதால் மாவட்ட செயலாளர்களின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. திமுகவை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள் பொறுப்புதான் பெரிய பொறுப்பாக இருக்கிறது. கடந்த 1993 வைகோ கட்சியை விட்டு சென்ற போது அவருடன் பல மாவட்ட செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணித் தாவினர். அப்போது கட்சியில் அதிருப்தியை சமாளிக்க பகுதி செயலாளர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம்

    தற்போது தமிழக வெற்றி கழகம் பெரிய அளவில் எழுச்சியை பெற்று இருக்கும் நிலையில் திமுகவின் அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தனித்தனி தொகுதி செயலாளர்களை நியமிக்கும் திட்டம் பரிசிலனையில் இருப்பதாக சொல்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் தனியாக ஒரு நிர்வாக கட்டுப்பாடு மாவட்ட செயலாளர்களின் அதிகாரமும் குறையும்.

    இளைஞர்கள்

    மேலும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சி நிகழ்ச்சிகள், உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பணிகள், என இளைஞர்களையும் அதிக அளவில் ஈடுபடுத்த முடியும் என்பது தான் இந்த திட்டத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. திமுகவில் பல மாவட்ட செயலாளர்கள் பல ஆண்டுகளாக வலுவான அதிகார மையங்களாக இருந்து வருகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் அனைத்து முக்கிய முடிவுகளும் அவர்களின் மூலம் நடைபெறுகின்றன.

    Advertisement

    தொகுதி செயலாளர்

    இந்த சூழலில் தொகுதி செயலாளர் பதவி உருவானால், மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் ஒரு அளவுக்கு பகிரப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதனால் திமுகவில் "எல்லாமே மாவட்ட செயலாளர்கள் தான்" என்ற நிலையை மாற்றும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், இந்த பதவிகள் பெரும்பாலும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

    சட்டப்பேரவைத் தொகுதி

    சமீப காலமாக திமுகவில் இளம் தலைமுறைக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்ற கருத்தை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்த திட்டம் உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இளைஞர்களை நேரடியாக சட்டப்பேரவைத் தொகுதி அளவில் பொறுப்பில் அமர்த்துவதன் மூலம் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கின்றனர்.

    சீனியர்கள் அதிருப்தி

    மேலும் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு தொகுதி செயலாளர் பொறுப்பை வழங்கும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    எனினும் இந்த யோசனைக்கு கட்சிக்குள் ஒரே மாதிரி ஆதரவு இல்லை இல்லை என்றும் சொல்கின்றனர். குறிப்பாக பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்களாக இருந்து வரும் சீனியர் நிர்வாகிகள், புதிய பதவி மூலம் தலைமை தங்களது அதிகாரத்தை குறைக்கிறது என்ற கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    English Summary

    DMK is considering constituency secretary posts as part of a major organisational overhaul following its 2026 Assembly election setback.