சென்னை: பருவமழையின் தீவிரத்தை அலட்சியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுக்காமல் இருப்பதோடு, சென்னை மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் தவெக அரசை கண்டித்து சென்னையில் 2 இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
உலக அளவில், எல் நினோ பொதுவாக வறட்சியை ஏற்படுத்தும் என்றாலும், 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இயல்பைவிட மிக அதிக அளவில் மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதோடு, கோடை வெப்பம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கடலோர அரிப்பு போன்ற பேரிடர்களையும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தச் சூழலில், தவெக அரசு இப்பேரிடர் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது. மக்கள் மீது அக்கறையின்றி குறட்டை விட்டு தூங்கும் அரசான ஆளும் தவெக அரசினை தட்டியெழுப்பும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்கியும் வரும் தமிழ்நாடு அரசின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து, சென்னை கிழக்கு சென்னை வடகிழக்கு சென்னை வடக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகிற இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் திமுக எம்.பி திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதேபோல, தவெக அரசை கண்டித்து சீர்கேட்டை கண்டித்து, சென்னை தெற்கு சென்னை மேற்கு சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகிற சென்னை சைதாப்பேட்டை, 'கலைஞர் பொன்விழா வளைவு" அருகில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்", திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு - சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் த.வேலு, கழக கல்வியாளர் அணிச் செயலாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., - சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்கள் மண்டலக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், பருவமழையின் தீவிரத்தை அலட்சியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுக்காமல் இருப்பதோடு, சென்னை மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.