தனியார் பல்கலை தொடங்க இனி 12 ஏக்கர் போதும்.. “யாருக்காக இந்த மாற்றம்?” - தவெக அரசுக்கு திமுக கேள்வி

  • சென்னை: சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 100 ஏக்கர் நிலம் இருப்பது கட்டாயம் என்று இருந்ததை 12 ஏக்கர் என அதிரடியாகக் குறைத்திருப்பது யாருக்காக? என தவெக அரசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சமூகநீதியைச் சீர்குலைத்து - உயர்கல்வியை வணிகமயமாக்க தவெக அரசு அவசர அவசரமாக சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்? என கோவி. செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல் முதலமைச்சர் விஜய்க்கு "எம்.எல்.ஏ."க்களை மக்கள் கொடுத்திருக்கும் இந்த நேரத்தில்கூட, த.வெ.க அரசின் "அடாவடி" மட்டுமல்ல, ஆணவ நடவடிக்கைகள் எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்துவிடும் என்பதால், நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கும் "தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா - 2026"க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள "தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவில்", "ப்ரைவேட் யுனிவர்சிட்டி" அமைக்க சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்; சென்னை தவிர மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், "Permanent Endowment Fund" ஆக 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் இருந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம், 2019-ஐ அவசர அவசரமாக த.வெ.க அரசு கூட்டத் தொடரின் கடைசி நாளில் திருத்தி நிறைவேற்றியிருக்கிறது.

    Advertisement

    உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 24.8.2026 அன்றே நடைபெற்று முடிந்துவிட்டது. 15 நாட்கள் கழித்து இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரமாகக் கொண்டு வந்திருப்பது ஏன்? இந்தத் திருத்தம் மூலம் சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க இருந்த 100 ஏக்கரை 12 ஏக்கர் என அதிரடியாகக் குறைத்திருப்பது யாருக்காக? இதுதவிர, மற்ற முனிசிபல் லிமிட் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவை என்றிருந்ததை, முனிசிபல் லிமிட்டிற்குள் 18 ஏக்கராகவும், கிராமப்புறங்களில் 25 ஏக்கராகவும் குறைத்திருப்பதன் உள்நோக்கம் என்ன?

    Advertisement

    இப்படி தனியார் பல்கலைக்கழகம் அமைக்கச் செலுத்த வேண்டிய Permanent Endowment Fund 50 கோடி ரூபாயை வெறும் 25 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி - இப்படி குறைக்கப்பட்ட 25 கோடி ரூபாய் சலுகை, ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகமாக அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என "பின்தேதியிட்ட சலுகை" ஏன் வழங்கப்படுகிறது?

    தனியார் பல்கலைக்கழகம் ஒருவேளை திவாலானால் - அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தான் இந்த Permanent Endowment Fund உருவாக்கப்பட்டுள்ளது. அதைச் சரிபாதியாகக் குறைத்து - ஏன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்குத் த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் உலை வைக்க வேண்டும்?

    Advertisement

    "கஜானா காலி" எனக் கூறி மின்கட்டணம், சொத்துவரி என மக்கள் தலையில் "வரி வசூல்" என்ற பாறையைத் தூக்கி வைக்க முயற்சிக்கும் த.வெ.க. அரசு, ஏற்கனவே மாணவர்களின் பெற்றோரிடம் அதீத கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏன் திட்டமிட்டுச் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது?

    நிதிப் பற்றாக்குறையில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த முடியாமல், தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கத்தான் இந்த உயர்கல்வி மானியக் கோரிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டதா? இப்படித் தளர்வு அளிக்க யார் யார் கோரிக்கை வைத்தார்கள் என்ற விவரமும் இல்லை. அதை அரசு வெளியிடவும் இல்லை!

    Advertisement

    புதிய சட்டத் திருத்தம் மூலம் புதிய பொறியியல் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும் "தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து" கேட்டுப் பெற்று, புற்றீசல் போல் எங்கு பார்த்தாலும் தனியார் பல்கலைக்கழகம் என்ற சூழல் உருவானால், பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்ன ஆவது? ஏற்கனவே எங்கள் ஆட்சியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்து, அதை நிறைவேற்ற முனைந்தபோது கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால், மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து அந்த முயற்சியை எங்கள் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அன்றைய தினம் கைவிட உத்தரவிட்டார்.

    ஆனால், இன்றைக்கோ புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு, உயர்கல்வியில் ஏழை, எளிய மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து - சமூகநீதிக் கொள்கைக்கு ஏன் வேட்டு வைக்கிறது? ஆகவே, அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும், இப்படிப் புதிய "தளர்வுக் கொள்கை" அறிவித்துத் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, 2026-ஐ தவெக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former DMK Minister Govi. Chezhian has questioned the TVK government as to for whose benefit the mandatory land requirement for establishing a private university was drastically reduced from 100 acres to 12 acres.