காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி

  • சென்னை: குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, போதிய நீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. இந்நிலையில், தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார். டெல்டா விவசாயிகள் கவலையில் இருக்கும் நிலையில், கர்நாடகா சென்றுள்ள முதல்வர் விஜய், காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம்.

    Advertisement

    அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.

    மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார்.

    Advertisement

    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    English Summary

    Mettur Dam was not opened on June 12 due to insufficient water, raising concerns among Cauvery delta farmers ahead of the Kuruvai cultivation season. Attention is now focused on whether Chief Minister Vijay can secure Tamil Nadu's rightful share of Cauvery water from Karnataka.