தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!


  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் புயல் ஓய்ந்து விட்டது. புயலில் கரை சேர்ந்த தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து விட்டது. தோல்வியை சந்தித்த திமுக தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவதோடு இளம் தலைமுறையினரின் கருத்துக்களை கேட்க ஜென்சி மீட்அப்பை சென்னையில் வைத்துள்ளது. ஆனால் எதிர்முகமான அதிமுகவில் கட்சிக்கான கட்சியின் தோல்விக்கான காரணத்தை கண்டறிவதைவிட கட்சியில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கே போராடி வருகின்றனர் அதிமுக தலைவர்கள். இதன் மூலம் அதிமுக-திமுக இரு பாதைகளில் பயணிக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    Advertisement

    தமிழக அரசியலில் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது ஒரு நிகழ்வு மட்டுமே. ஆனால் அந்த வெற்றி அல்லது தோல்விக்கு பிறகு அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதுதான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

    Advertisement

    அந்த வகையில் பார்க்கும் போது 2026 தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு தற்போது தமிழக அரசியல் களத்தில் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு பாதைகளில் பயணித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.

    சமீபத்திய தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், தோல்விக்கான காரணங்களை ஆராய்வதில் அக்கட்சி தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதை அக்கட்சியின் நடவடிக்கை முலமே தெரிய வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் தலைமுறையினரின் மனநிலையை புரிந்து கொள்வதற்காக பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக "ஜென்-சி" தலைமுறையினருடன் நேரடி கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

    Advertisement

    தேர்தல் முடிவுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிலைகளில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. எந்த இடங்களில் பின்னடைவு ஏற்பட்டது, மக்களிடம் எந்த திட்டம் சரியாக சென்றடையவில்லை, எதிர்க்கட்சிகள் எந்த விஷயங்களை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சென்றன என்பது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    எல்லாவற்றையும் விட தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் பொதுவெளியில் ஒப்புக் கொண்டிருப்பதோடு தோல்விக்கான காரணம் குறித்து தொண்டர்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளத்தையே தொடங்கி விட்டார், அது மட்டும் இல்லாமல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு, அவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளுடனும் அடிமட்ட தொண்டர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இதன் மூலம் ஒரு தேர்தல் தோல்வியை வெறும் அரசியல் பின்னடைவாக மட்டும் பார்க்காமல், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை திமுக தலைமை உணர்ந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் மீண்டும் மக்களிடம் செல்வது, புதிய தலைமுறையினருடன் தொடர்பை வலுப்படுத்துவது, சமூக ஊடக செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மறுபுறம், அதிமுகவில் இன்னும் உட்கட்சி சிக்கல்கள் முழுமையாக முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. கட்சியின் பல்வேறு அணிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர் தற்போதும் அதே நிலையில் தான் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வெல்லமண்டி நடராஜன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவி விட்டனர்.

    Advertisement

    இதுவரை தோல்வி குறித்து அதிமுக ஒருமுறை கூட ஆலோசனை கூட்டத்தை நடத்தவில்லை. மேலும் அடுத்து என்ன செய்வது என்பது குறித்தும் விவாதிக்கவில்லை. ஆனால் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பது, எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதிலேயே ஒரு மாதத்தை கடத்திவிட்டார். இதனால் எதிர்கால அரசியல் வியூகங்களை வகுப்பதை விட, முதலில் தங்களது பதவியைகளை தக்க வைத்துக் கொள்வதிலேயே அதிமுக தலைமையின் கவனம் அதிகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    ஒரு காலத்தில் தமிழக அரசியலை ஆட்சி செய்த அதிமுக, தற்போது தனது அமைப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆட்சியை கைப்பற்றும் திட்டங்களை விட, கட்சியில்இருப்பை வலுப்படுத்தும் முயற்சிகளே முன்னுரிமையாக உள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.

    Advertisement

    இதன் காரணமாகவே தற்போது தமிழக அரசியலில் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு காணப்படுகிறது. அதிமுக தனது அரசியல் இருப்பையும் கட்சி கட்டமைப்பையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது என்ற பார்வை உருவாகியுள்ள நிலையில், திமுகவோ அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தயாரிப்புகளை இப்போதே தொடங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    English Summary

    While DMK studies its 2026 election defeat and engages Gen Z voters, AIADMK remains focused on resolving internal conflicts.