ஜெயலலிதாவுக்கு இருந்த அதே திமிர் விஜயிடம்.. அந்தம்மாவுக்கு கடைசில என்ன ஆச்சு.. ஆர்.எஸ் பாரதி சர்ச்சை

  • சென்னை: அரைநூற்றாண்டுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தமிழக அரசியலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தவெக Vs திமுக என்று அரசியல் மாறியுள்ளது. தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் மீது திமுக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் விஜயை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு திமுக ஆர்.எஸ். பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஜெயலலிதாவுக்கு கடைசியில் என்ன நடந்தது என்று ஆர்.எஸ் பாரதி பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

    Advertisement

    சென்னை திருவொற்றியூர் பகுதியில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், "விஜய் அவர்களே.. திருவொற்றியூர் கூட்டம் வாயிலாக உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்பத்தான் உங்களுக்கு கேடு காலம் ஆரம்பித்துள்ளது. இப்படித்தான் 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது டான்சி நில விவகாரம் பிரச்சனையானது.

    Advertisement

    ஜெயலலிதாவுக்கு இருந்த அதே திமிர்

    ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் முதலமைச்சர் விஜய் டெண்டரில் ஊழல் செய்துள்ளார். அதேபோல 1991 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் டான்சி நிலம் வாங்கப்பட்டது. நான் தான் முதல்முதலாக அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த ஆவணங்களை எல்லாம் பார்த்து தப்பு என்று நான் தான் கூறினேன். அந்தம்மா வேறு ஏதும் உலகமகா தப்பு செய்யவில்லை. அந்தம்மாவே நிலம் வாங்கியதை ஒப்புக் கொண்டார்.

    இன்றைக்கு முதலமைச்சர் விஜய்க்கு இருக்கும் திமிரை போலத்தான் அன்றைக்கு ஆட்சிக்கு வந்த முதல்முறை ஜெயலலிதாவுக்கும் திமிர் இருந்தது. காரணம் எதிர்க்கட்சியில் யாரும் இல்லை. ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான் வெற்றி பெற்றார். டான்சி நிலம் வாங்கினேன். அதில் என்ன தவறு என கேட்டார். அவராக வாய் விட்டு சிக்கி கொண்டார். அதுதான் கடைசிவரை அந்த அம்மாவை சிறைக்கு கொண்டு சென்றது.

    Advertisement

    சர்ச்சை பேச்சு

    இந்த ஆட்சியிலும் முதல் வழக்கே அப்படித்தான் ஆரம்பித்துள்ளது. இப்போதே சொல்கிறேன், சென்டிமென்டலாக முதன்முதலாக இவரும் அந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பித்துள்ளார். கடைசியாக ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை" என்றார். இந்த வீடியோ வைரலாகி ஆர்.எஸ். பாரதியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. இதற்கு தவெக, அதிமுக இருவரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    DMK RS Bharathi said, Vijay shows same character of Jayalalithaa. What happened to Jayalalithaa at the end. His speech sparks controversy.