சென்னை: ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தற்போதைய தவெக அரசு கலைத்திருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டிருந்த உயர்மட்டக் குழுவை கலைத்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவானது சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்றும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இந்தக் குழுவின் பணிகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதால் குழு கலைக்கப்படுவதாகவும் தவெக அரசு தெரிவித்துள்ளது.
தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்த தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில உரிமையை விட்டுவிட்டு, தியேட்டர் உரிமையில் தான் தவெக அரசு கவனம் செலுத்துவதாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த 'டம்மி' சி.எம் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய - மாநில உறவுகளைக் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைக் கலைத்து மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளார் முதலமைச்சர் விஜய். எதையும் உருவாக்கும் திறனும் இன்றி, அடுத்தவர் உருவாக்கியதைப் பேணும் முதிர்ச்சியும் இன்றி இழிவான அரசியலில் இறங்கியுள்ளது மூடர்கூடத் த.வெ.க அரசு! திராவிட மாடல் அரசில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மிக நீண்ட அனுபவமும், ஆராயும் பொருண்மையில் ஆழ்ந்த அறிவும் மிக்க வல்லுநர்கள். அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்ற பெயரைத் தங்கள் பணிக்காலத்தில் ஈட்டியவர்கள். இவர்களால் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி எனப் பல தலைவர்களும் அதனைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முதலியோர் இந்த அறிக்கையைப் பாராட்டி, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதங்களை மூடர்கூடத் த.வெ.க அரசு படித்துப் பார்க்க வேண்டும். கழக அரசில் அமைத்த குழு உறுப்பினர்களின் நேர்மையிலும், அவர்களது அறிக்கையின் தரத்திலும் என்ன முயன்றாலும் குறைகாணவோ குற்றம் சாட்டவோ முடியாது என்பதால் மிக அற்பமான ஒரு காரணத்தைக் கூறி, குழுவைக் கலைத்திருக்கிறார்கள். குரியன் ஜோசப் தலைமையிலான குழு சட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட அமைப்பு (statutory body) அல்ல என்றும், ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளுடன் இது ஒத்துப் போகிறது என்றும் மொன்னையான காரணத்தைக் கூறியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால், இவர்கள் கூறும் சட்ட ஆணையமே ஒரு statutory body அல்ல என்பதை 'தி இந்து' நாளேடு சுட்டிக்காட்டியுள்ளதோடு, குரியன் ஜோசப் அளித்த அறிக்கை மிகவும் போற்றத்தக்கது எனவும் திராவிட மாடல் அரசின் முயற்சிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம் ஆகிய அமைப்புகளும் statutory body அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பாகம் பெற்ற பாராட்டைப் பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியிலும், அடுத்த பாகம் வெளிவந்தால் மாநில உரிமைகள் குறித்த விவாதம் இந்திய அளவில் தீவிரமடையும் என்ற அச்சத்திலும் குழுவைக் கலைத்துள்ளது த.வெ.க. அரசு. மாநில உரிமைகளுக்காகக் கழக அரசில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் முயற்சிக்கு மூடுவிழா நடத்தியுள்ள த.வெ.க அரசின் சின்ன புத்தி அரசியலை வரலாறு மறக்காது, மன்னிக்காது!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சப்பை கட்டு வேண்டாம்.. உண்மையை ஏற்றுக்கோங்க.. தவெக மீது பிரேமலதா விமர்சனம்
பெங்களூரில் ஷாக்! பெட்ரோலில் 30%க்கும் அதிகமாக எத்தனால் கலப்பு! அரசு ஆய்வில் வெளிவந்த உண்மை