சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகிவிட்டன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் குற்றங்கள், காவல்துறை கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியில் கடந்த 60 நாட்களில் போலீசார் கொடுத்த டார்ச்சரால் 4 மரணங்கள் நடந்துள்ளன என்று திமுக பகீர் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் திமுக வழக்கறிஞர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "பிணநாற்றம் அடிக்கிறது. 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக பெட்டி கடை வைத்திருந்த சபரிவர்மன் என்பவரை காவல்துறை கடந்த 9 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்தது. கடந்த 10 ஆம் தேதி அவரை கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ சான்றிதழ் பெற்று நீதிபதியிடம் ஆஜர்படுத்த வேண்டும். சபரிவர்மனை அப்போதுவரை காவல்துறை தாக்கவில்லை. உறவினர்கள் பார்த்தபோது கூட நன்றாக இருந்தார்.
13 ஆம் தேதி காவல்துறை அவரின் உறவினர்களுக்கு அழைத்து சபரி நாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளனர். சபரிநாதனை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதன்பிறகு திடீரென சபரியின் உடல் பிணவறையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்லியுள்ளனர். 10 ஆம் தேதி நன்றாக இருந்த சபரி 13 ஆம் தேதி எப்படி இறந்தார். அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் சினிமா சூட்டிங் நடத்தி கொண்டிருக்கிறார். உளவுத்துறை இந்த தகவலை சொல்லியுள்ளனர். அதை திசை திருப்புவதற்காக பெரம்பூரில் சினிமா சூட்டிங் செய்துள்ளார். 200 கிராம் குட்கா வைத்திருந்த மாற்றுத்திறனாளியை காவல்துறை அடித்து கொலை செய்துள்ளது. குட்கா வியாபாரிகளிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கரை உடன் வைத்துள்ளனர். இதுதான் தவெக கொடுத்துள்ள மாற்றம். திமுக ஆட்சியில் சிவகங்கையில் அஜித் என்பவர் காவல்துறை கஸ்டடியில் இறந்தார். அப்போது எங்களின் முதலமைச்சர் ஸ்டாலின் அஜித் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என விஜய் கேட்டார். இப்போது மக்கள் ரீல்ஸ் வேண்டாம். நீதி வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் விஜய் ஓடு ஓடு என்று ஒடிக் கொண்டிருக்கிறார். தவெக பொறுப்பேற்ற இந்த 60 நாட்களில் 4 பேர் காவல்துறை கஸ்டடியில் மரணமடைந்துள்ளனர். நாகர்கோவில், திருச்சி, கிருஷ்ணகிரி, தென்காசி பகுதிகளில் போலீஸ் டார்ச்சரால் 4 பேர் இறந்துள்ளனர். தவெகவினருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் நிலவுகிறது. ஈரோட்டில் குட்கா கடத்திய தவெக நிர்வாகி அருண்குமாரை ஸ்டேஷன் பெயிலில் வெளியிட்டுள்ளனர். விஜய் அரசு கொலை குற்றம் செய்துள்ளது" என்றார்.விஷயத்தை திசை திருப்ப சூட்டிங்
போலீஸ் கஸ்டடியில் 4 மரணங்கள்