கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்

  • சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதறுண்டு போயுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ள சூழலில், முன்னாள் கூட்டணிக் கட்சிகள் திமுகவைவிட்டு விலகி, புதிய அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் , முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது எனும் காரணத்தை முன்வைத்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு அளித்து, கேபினட் அந்தஸ்துடன் அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளன. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக விலகத் தொடங்கின. முதலில் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் விலகின. இறுதியாக நீண்டகால கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் திமுகவிடம் இருந்து விடைபெற்றது.

    இந்தக் கட்சிகளில் சிபிஎம், சிபிஐ தவிர மற்றவை தற்போது தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இது திமுகவின் உள்வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    Advertisement

    "காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு கொடுத்ததில் தவறில்லை. மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால், மதிமுக கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். அந்த சின்னத்தில் நிற்காமல் தனித்து போட்டியிட்டிருந்தால், இன்று தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு அளித்திருக்கலாம் அல்லது மாற்று முடிவு எடுத்திருக்கலாம். இப்போது அந்த சின்னம் எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    துரை வைகோவின் இந்தக் கருத்து, திமுக மீது மறைமுகக் குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. ஜூன் 27 அன்று நடைபெறவிருக்கும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    திமுகவின் ஒரு மூத்த தலைவர், தங்களது தற்போதைய நிலையை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு வேதனை தெரிவித்தார். "பாகுபலியில் கட்டப்பா ஒரே ஒரு கத்தியால் குத்தினான். ஆனால், இங்கு பல கட்டப்பாக்கள் மாறி மாறி திமுகவின் முதுகில் கத்தியை இறக்கியுள்ளனர். தேர்தல் வரை உடன் இருந்துவிட்டு, தோல்வி வந்தவுடன் சொல்லாமல் ஓடி, புதிய ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் இந்தத் துரோகம், பாகுபலிக்கு நடந்ததை விடக் கொடியது" என்று கோபத்துடன் தெரிவித்தார்.

    தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. ஒரே தேர்தல் தோல்வியில் முழு கூட்டணியும் ஆளுங்கட்சிப் பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டது, மற்றும் "திமுக சின்னத்தில் நின்றது சாபக்கேடு" என்று கூட்டணித் தலைவரே புலம்பியது ஆகியவை திராவிட அரசியலில் புதிய கசப்பான அத்தியாயத்தை எழுதியுள்ளன.

    Advertisement

    அரசியல் விமர்சகர்கள், இந்த மாற்றங்கள் தமிழக அரசியலின் எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றிவிடும் என்று கருதுகின்றனர். திமுக தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, தனது அடுத்தகட்ட உத்திகளை வகுக்கும் நிலையில் உள்ளது.

    English Summary

    DMK Stabbed by 'Kattappa' Knives: Alliance Partners Join TVK Cabinet, Durai Vaiko in Deep Distress