மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல்

  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு தனது அறிக்கையை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சில தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருந்த செல்வாக்கை கட்சித் தலைமை சரியாக மதிப்பிடத் தவறியது, பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை போய்ச் சேராதது உள்ளிட்டவை தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய 36 பேர் கொண்ட 19 ஆய்வுக்குழுக்களை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார்.

    Advertisement

    இந்தக் குழுக்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை நேரடியாக சேகரித்தன. அந்த கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கை திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திமுக

    அதில், கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்கள் முதல் தேர்தல் களத்தில் ஏற்பட்ட தவறுகள் வரை பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், தகுதியுடைய பல பெண்களுக்கு அந்தத் தொகை கிடைக்காதது கட்சிக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மகளிர் உரிமைத் தொகை

    உரிமைத்தொகை கிடைக்காமல் ஏமாற்றமடைந்த பெண்கள் கணிசமான அளவில் திமுகவிலிருந்து விலகியதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் திறமையாக அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியதாகவும் ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்த இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உருவான ஆதரவை திமுக நிர்வாகிகள் பலர் சரியாக கணிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயின் பொதுக்கூட்டங்களுக்கு கிடைத்த வரவேற்பு, சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் இளம் வாக்காளர்களின் மனநிலை குறித்து திமுக தரப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என ஆய்வுக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

    Advertisement

    திமுக அமைச்சர்கள்

    இதுமட்டுமல்லாமல், அமைச்சர்களை பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியாத சூழல் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக தெரிவிக்க முயன்றபோதும், அமைச்சர்களின் உதவியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் காரணமாக பலரால் அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

    உள்ளாட்சித் துறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் எதிர்பார்த்த வேகத்தில் பணிகள் நடைபெறாததும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமையும் கட்சியின் செல்வாக்கை பாதித்ததாக ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிந்துரைத்த திட்டங்கள் பல இடங்களில் செயல்படுத்தப்படாததால் அடிப்படை வசதிகள் தொடர்பான அதிருப்தி அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    முக்கியத்துவம்

    கட்சிக்குள் இருந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்டகால தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாததும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் அனுபவம் வாய்ந்த பலர் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குறையும் எழுப்பப்பட்டுள்ளது.

    திமுக அரசு

    அதேபோல், கூட்டுறவுச் சங்கங்கள், ஆவின் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி உருவானதாகவும் ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அறநிலையத் துறையின் சில நியமனங்கள் தொடர்பாக கட்சிக்குள் இருந்த அதிருப்தியும் தேர்தல் நேரத்தில் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக அரசு மற்றும் திமுக கட்சி ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இடத்தில் தனித்தனியாக இயங்கியது போன்ற தோற்றம் மக்களிடம் உருவானதாகவும் அறிக்கை கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    திமுக தலைமை

    இதனால் அரசின் சாதனைகள் வாக்குகளாக மாறாமல் போனதாகவும், நிலையான ஆதரவு வாக்காளர்களை உருவாக்க முடியாமல் போனதாகவும் ஆய்வுக்குழு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், கள ஆய்வுக்குழு பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு கட்சியின் அமைப்பு மற்றும் தேர்தல் அணுகுமுறையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது

    English Summary

    Internal survey report reportedly cites women voter dissatisfaction and Vijay’s influence as key reasons behind DMK’s 2026 defeat.