சென்னை: சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் திமுக ஆதரவாளர்களான ஜூலி உள்பட பலரும் பங்கேற்றனர். DMK Gen Z என்று எழுதப்பட்ட டீசர்ட் அணிந்திருந்தால் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிருப்தியடைந்த திமுக ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் 'தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் திமுக ஆதரவாளர்கள் நேற்று பங்கேற்றனர். 'பிக்பாஸ்' பிரபலமான ஜூலி உள்பட பலரும் பங்கேற்றனர். இதில் பெரும்பாலானவர்கள் கருப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தனர். அதில் DMK Gen Z என்று எழுதப்பட்டு இருந்தது. இதனை அங்கிருந்த சிலர் விரும்பவில்லை. அப்போது ஒருவர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். அந்த நபர் திமுக ஆதரவாளர்களை நோக்கி, ''ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க. இதுவெல்லாம் தெரிந்து நீங்கள் இப்படி வந்து உள்ளீர்கள். இப்ப எதுக்கு நீங்கள இப்படி வந்தீங்க? ஆமா நாங்க தான் பின்னாடி நிற்கிறோம் என்று சொல்வதற்கா?'' என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து DMK Gen Z டீசர்ட் அணிந்திருந்த நபரை பார்த்து இன்னொருவர் ''ப்ரோ இங்க கட்சியே கிடையாது. இது ஒரு மூமெண்ட்'' என்றார். இது போராட்டத்தில் பங்கெடுக்க சென்ற திமுக ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூலி உள்பட திமுக ஆதரவாளர்கள் போராட்ட களத்தை விட்டு மொத்தமாக வெளியேறி சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.