“மாற்றம்னு சொல்லிட்டு பெயர் மாற்றம் மட்டும்தான் நடக்குது.. தவெக அரசு மீது டிகேஎஸ் இளங்கோவன் அட்டாக்

  • சென்னை: "மாற்றத்திற்கான கட்சி என சொல்லிவிட்டு வெறும் பெயர்மாற்றத்திற்கான கட்சியாக ஆட்சிக்கு வந்துள்ளார்கள். திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை." என்று தவெக அரசை திமுகவின் செய்தி தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சில பேருந்துகளின் அறிவிப்பு திரையில் மகளிர் விடியல் பயணம் என்பதற்கு பதில், மகளிர் பயணம் என்று மட்டும் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை திமுக விமர்சித்துள்ளது.

    Advertisement

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செய்தி தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக பெயர் மாற்றத்திற்கான கட்சியாக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி அமைந்ததில் இருந்து முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எல்லா திட்டங்களின் பெயர்களையும் மாற்றுவதையே நோக்கமாக வைத்திருக்கின்றனர். அந்தத் திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உட்பட பல தரப்பினரும் இந்த ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தவெக சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல.. பெயர் மாற்றத்திற்கான ஆட்சி. மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' திட்டத்தில் பெயரை மாற்றி இருக்கின்றனர். திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டத்திற்கு பெயரை மாற்றி வைத்து, இவர்கள் திட்டம் போல காட்டுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும் பள்ளி, கல்லூரிகளில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிகேஎஸ் இளங்கோவன், "இது தவறானது. மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர வேண்டும். ஆனால் தொழில் துறை அமைச்சர் மாணவர்களை ஆய்வு செய்கிறார். அவர் எந்தப் பள்ளியில் படித்தார் என்று தெரியவில்லை. அவர் தவறான கேள்விகளை கேட்டுவிட்டு, இவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை வெளிப்படுத்திவிட்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறுகிறார்.

    மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் கல்வி கற்றுத்தர முடியும். தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கிறார்கள். அத்தனை சிறந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வியின் நிலை மிக உயர்ந்த நிலை. அதை தொழில் துறை அமைச்சர் மாற்ற முயல்கிறாரா? அவர் ஏன் ஆய்வு செய்கிறார் என்று தெரியவில்லை? கரூர் மரண சம்பவத்தில் ஆரம்பத்திலேயே அங்கிருந்து ஓடி வந்தவர் விஜய். பாதிக்கப்பட்ட அந்த மக்களை மருத்துவமனைகளில் சென்று கூட பார்க்கவில்லை.

    Advertisement

    பாதிக்கப்பட்ட மக்கள் 10 மணி நேரம் நெரிசலில் இருந்தால் மயக்கம் அடைவது இயல்பு. அதை சுற்றியுள்ளவர்கள் கூட காப்பாற்றாதது தான் 41 பேர் மரணத்திற்கு காரணம். அதையெல்லாம் மறைத்து மயங்கியவர்களை காப்பாற்றாமல், திமுக தான் அதற்கு காரணம் என்ற‌ பொய் பிரச்சாரத்தை அன்று முதலே செய்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாதபோது அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை அனுப்பி வைத்து, அந்த மக்களுக்கு உதவியவர் எங்கள் தலைவர். அதையும் மீறி 100 பேர் மயக்கம் போட்டதில் அதில் 60 பேர் காப்பாற்றப்பட்டனர். 41 பேர் இறந்துள்ளனர். இவர்களை காப்பாற்ற முயன்றது திமுக. ஆனால் அந்த கூட்டத்திற்கு சென்றவர், அங்கிருந்து சென்னைக்கு ஓடிவிட்டார். இப்போது அந்த பழியை திமுக மீது சுமத்துகிறார்கள்.

    Advertisement

    ஆனால் முதலமைச்சர் காவல்துறையை வைத்து 41 பேரை கொன்றதாக ஒரு அமைச்சர் பொய்யான பழியை சுமத்தினார். அதற்காக தான் நீதிமன்றம் சென்றோமே தவிர, தவெக தலைவர் கரூருக்கு போகக்கூடாது என்று தடுக்கவில்லை. எங்கள் வழக்கில் விஜய் கரூருக்கு போகக்கூடாது என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறோமா? இவரை போகக்கூடாது என்று ஒரு வரி கூட இல்லை. முதலமைச்சர் போவதைத் தடுக்க முடியாது. முதலமைச்சர் கரூருக்கு போக பயந்து பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து பார்த்தார். கரூருக்கு சென்று ஒவ்வொரு வீடாக பாதிக்கப்பட்டவர்களை பார்த்திருக்கலாமே? ஏன் போகவில்லை?

    பொய்யைக் கட்டமைத்து 10 மணி நேரம் மக்களை நிற்க வைத்து அவர்கள் இறந்தார்கள் என்பது தான் காரணம். ஆனால் திமுக தான் காரணம் என்று சொல்கிறார்கள். இவர்கள் செய்த தவறை மறைக்க பொய்யை சொல்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    “They came to power claiming to be a party for change, but have turned out to be a party merely for changing names. Their actions are focused solely on renaming schemes. They have not fulfilled any of the promises they made,” said DMK’s TKS Elangovan, criticizing the TVK government.