சென்னை: தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து வருவதாக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து நாளை திமுக மீண்டும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 107 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 118 தேவை என்கிற போது காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் ஆட்சி அமைத்து வருகிறார்.
இவர்களில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளை தவிர மற்றவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இதையடுத்து இவர்கள் 6 பேரும் தவெகவில் இணைந்துவிட்டனர். அதிலும் விஜயபாஸ்கர்கள் இருவரும் தவெகவில் இணைந்த நிகழ்ச்சியை மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடத்தினர். இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவில்லை. பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் தவெகவில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் தாங்கள் அதிமுகவில் இருந்து ஏன் வந்தோம் என்பது குறித்து இருவரும் விளக்கினர். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை தொடங்கியவர் எம்ஜிஆர். தவெகவை உருவாக்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார் விஜய். இது சாதாரண மாற்றம் இல்லை. இது ஒரு தலைமுறை மாற்றம். எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் அதிமுகவின் பொதுச் செயலாளராக்கினோம். ஆனால் அவரது தவறான முடிவுகளால் அந்த இயக்கம் கரையேற முடியாமல் தள்ளாடி கொண்டிருக்கிறது. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை அவர் துரோகி என்கிறார். யார் துரோகி? 42 ஆண்டுகள் அரசியலில் இருந்தவன் நான். கரூரில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வென்றிருக்கிறேன். நான் மட்டுமல்ல, கரூரில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தவெகவில் இணைந்திருக்கிறோம் என்றார். இதையடுத்து இந்த நிகழ்வுக்கு பிறகு எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியே வந்திருக்கிறோம். தொண்டர்கள், நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுவிட்டுத்தான் இந்த கடின முடிவை எடுத்தோம். ஒரு சிலர் அதிமுகவில் இருந்து விலக வேண்டாம் என்றார்கள். ஆனால் 90 சதவீதம் பேர் அதிமுகவில் இருந்து விலகுவதே சரி என சொன்னதால் நாங்கள் விலகிவிட்டோம். தவெகவில் இது போல் இணைப்பு விழா பிரம்மாண்டமாக நடந்ததில்லை. விஜய் தலைமையிலான அரசு எங்களை அணுகினார்கள். அதனால் நாங்கள் தவெகவில் இணைந்துவிட்டோம் என தெரிவித்தார். இப்படி தவெகவினர் அணுகியதால் நாங்கள் இணைந்துவிட்டோம் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடியோ திமுகவுக்கு லட்டு போல் கிடைத்துவிட்டது. இதனால் தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து வருவதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து நாளை மீண்டும் புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்து குதிரை பேரம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.குதிரை பேரம் நடந்ததா? விஜய்யிடம் கேட்கும் ஆளுநர் அர்லேகர்! இன்றே பாய்கிறது நோட்டீஸ்? கிடுக்கிப்பிடி
வீரமணி விளாசிய குதிரை பேரம்! ஆளுநர் கையிலெடுக்கும் சட்டப்பிரிவு 167.. சந்தையாகிறதா சட்டமன்றம்?