சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு திமுகவிலிருந்து 5 எம்எல்ஏக்கள் வர ரெடியாக இருப்பதாக தவெக நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், தற்போது திமுக எம்எல்ஏக்களை இழுக்க தவெக முயற்சித்து வருவது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், கடந்த 60 ஆண்டுகளில் நடக்காத மாற்றம் ஏற்பட்டிருந்தது. திராவிட் கட்சிகளை ஓரம் கட்டி விஜய் தலைமையிலான தவெக பெரும் வெற்றியை பெற்றிருந்தது. தவெக 108, திமுக 59, அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. என்னதான் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், ஐயுஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த ஆதரவுதான் பேசியது. இப்படியாக தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பினால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த தவெக.. அதிமுகவினரை கட்சியில் இணைக்க தீவிரம் காட்டியது. இதன் விளைவாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதிவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவினர். அதிமுகவில் நின்று வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல முதலமைச்சர் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால்.. ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டார். எனவே மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தற்போது அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் இழுத்ததாக தவெகவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கு காரணமாக இடைத்தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் இழுக்கடித்து வருகிறது. நிலைமை இப்படியாக இருக்கையில், திமுகவிலிருந்து தவெகவுக்கு எம்எல்ஏக்களை இழுக்கும் பணிகள் ஜரூராக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் உட்கட்டமைப்பில் சமீபத்தில்தான் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. 70 வயதுக்கு மேல் உள்ள நிர்வாகிகளை விடுவிக்க கட்சி தலைமை யோசித்திருக்கிறது. எனவே பலரின் பதவிகள் காலியாகும். இதனால் அதிருப்தியில் இருககும் எம்எல்ஏக்களை லிஸ்ட் எடுத்து அதில் கட்சி தாவ உள்ளவர்களை அடையாளம் கண்டு.. 5 பேரை தவெக ரெடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 5 பேரில் முன்னாள் அமைச்சரும் ஒருவர் என்று பேசப்படுகிறது.