சென்னை: என்னாது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ரவுடி என விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ரவுடி என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியதற்கு அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 6 மணி நேரம் என்ன விசாரணை நடத்தப்பட்டது? அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்வது குறித்து இதுவரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. அப்படியென்றால் இந்த ஆட்சியை விஜய் நடத்துகிறாரா இல்லை தலைமைச் செயலகத்தில் அமர வைத்திருக்கக் கூடிய 2, 3 தனிநபர்கள் நடத்துகிறார்களா? நிர்மல் குமார், அனிதா ராதாகிருஷ்ணனை ரவுடி என கூறியிருந்தார். அவர் மீது வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே.சரண் ஜெயராமன் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சரண் ஜெயராமன் மீது 4 பெண்கள், காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சரணை வீடு புகுந்து கைது செய்துள்ளார்கள். அவதூறு வழக்குகளில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? புகார் கொடுத்த அந்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐடியில் உள்ள வீடியோக்களை காவல் துறையினர் பார்த்தால் அவர்கள் எத்தனை கீழ்த்தரமாக திமுகவையும் திமுக நிர்வாகிகளையும் பேசியுள்ளார்கள் என்பது தெரியும். சென்னை மேயர் பிரியா குறித்து எத்தனை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார்கள் என்பது அவர்களது ரீல்ஸ்களை போய் போலீஸார் பார்த்தால்தான் தெரியும்! ஆதவ் அர்ஜுனா, மரியவில்சன் உள்ளிட்டோர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பாஜக பாணியில் செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 20ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசினார் என்ற புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை தவெகவில் இணையுமாறு தனக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தான் எப்போதும் திமுககாரனாகவே இருப்பேன் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார். இவரது கைது நடவடிக்கைக்கு ,ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தவெகவில் இணையுமாறு தன்னை மிரட்டுகிறார்கள் என்ற அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், காலில் விழுந்து கெஞ்சினாலும் ரவுடியை தவெகவில் சேர்க்க மாட்டோம் என கூறியிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.