சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக 2வது இடத்தை பிடித்ததால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலினின் இளைஞரணி வியூகமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக 2வது இடத்தை பிடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தவெகவினர் எளிதாக வெல்வார்கள் என்றும், திமுகவுக்கு டெபாசிட் கிடைக்குமா என்றெல்லாம் அக்கட்சியினர் பேசி வந்தனர். ஆனால் மதுராந்தகத்தில் திமுக 53,463 வாக்குகளும், தாராபுரத்தில் 57,370 வாக்குகளும் பெற்று வாக்கு வங்கியை நிரூபித்து காட்டி இருக்கிறது.
இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக பலமாக இருந்த போதும், திமுக எப்படி 2வது இடம் பிடித்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் வியூகம் காரணமாக அமைந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே திமுக களமிறங்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தது உதயநிதி ஸ்டாலின் தான். இதன்பின் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் இடைத்தேர்தல் பொறுப்பையும் உதயநிதி ஸ்டாலினே எடுத்து கொண்டிருக்கிறார். இரு தொகுதிகளிலும் சீனியர்களான எவ வேலு, தா.மோ.அன்பரசன், செந்தில் பாலாஜி, சக்கரபாணி ஆகியோர் மட்டுமே சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர். மற்றபடி சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் ஆர்வம் காட்டவில்லை. இதனை தொடக்கத்திலேயே உதயநிதி ஸ்டாலின் சரியாக கண்டறிந்துள்ளார். இதனால் உடனடியாக சீனியர்களை நம்பாமல் 9 இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் என்று இரு தொகுதிகளிலும் 750 பேரை இறக்கி இருக்கிறார். ஒரு பூத்துக்கு 10 யூத் என்ற அடிப்படையில் பணியாற்றி இருக்கின்றனர். ஒரு பக்கம் சீனியர்கள் மறுபக்கம் இளைஞர்கள் என்று திமுக பிரித்து கொண்டு தீவிரமாக களமாடி இருக்கிறது. இதன் காரணமாகவே தாராபுரத்தில் எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்குகளை திமுகவால் கைப்பற்ற முடிந்துள்ளது. இதனால் உதயநிதி ஸ்டாலின் மறுசீரமைப்பிலும் ஆர்வமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.