தேனி: கடந்த திமுக ஆட்சியின்போது உச்ச நீதிமன்றத்தில் முறையான வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தினால் மேகமலை வருசநாடு மக்களுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது என்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை சுட்டிக்காட்டி மேகமலை, வருசநாடு, நரியூத்து, தும்மகுண்டு உள்ளிட்ட 9 ஊராட்சி கீழ் உள்ள 98 மலை கிராமங்களில் பல தலைமுறைகளாக பல்லாயிரக்கணக்கான மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மலை கிராம மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தில் மலை கிராம மக்களை வெளியேற்றுவதற்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது, புலிகள் காப்பக பகுதிகள் பட்டா வழங்கக்கூடாது, மின்சாரம் மற்றும் குடிநீர் சேவையை துண்டிக்கபட வேண்டும், தேவைப்பட்டால் துணை இராணுவத்தை பயன்படுத்தி நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பை கேள்விப்பட்டு மலை கிராம மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கடும் அதிர்ச்சி அடைந்தனர், இந்த நிலையில் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்தி கிராமப் பகுதியைச் சேர்ந்த நதியா (38) என்ற பெண் நேற்று முன்தினம் மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேனியில் நேற்று வருஷநாடு மற்றும் மேகமலை பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் இடம் ஆலோசனை நடத்திய கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டி அளிக்கையில், "கடந்த திமுக ஆட்சியின் போது வருசநாடு மேகமலை பகுதி மக்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தினால். தற்போது இத்தகைய தீர்ப்பு வந்துள்ளது. தமிழக அரசு ஓரிரு நாளில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும். மக்களை அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் பண்ணக்கூடாது.. மக்களை தூண்டி விடக் கூடாது.. விரைவில் வனத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரும் பொறுப்பு அமைச்சருமான நிர்மல் குமார் இந்த பகுதி மக்களை சந்தித்து பேசுவார்" இவ்வாறு பேட்டியின் போது கூறினார்.