பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க

  • சென்னை: இன்றைய அவசர உலகில் இட்லி, தோசை மாவை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதும், பாக்கெட் மாவுகளை வாங்கி உண்பதும் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.. இத்தகைய பழக்கங்கள் எவ்வாறு உடலில் நச்சுக்களை உருவாக்கி, செரிமானக் கோளாறு உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு வழிவகுக்கின்றன.. போதிய விழிப்புணர்வு இல்லாமல் நாம் செய்யும் இந்தத் தவறுகள், நாளடைவில் நம் உடல் நலனை சீர்குலைப்பதாக உணவு நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    Advertisement

    இட்லி, தோசை மாவை பொறுத்தவரை, அது நொதித்து வரும் தன்மையுடையது.. இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட்டாலும், அரைத்த 24 மணி நேரத்திற்குள் மாவைப் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

    Advertisement

    இட்லி தோசை மாவு பாக்கெட்

    பலர் மாவை அரைத்து பிரிட்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்துகிறார்கள்.. பிரிட்ஜில் எவ்வளவு குளிரில் வைத்தாலும்கூட, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை முழுமையாகத் தடுக்க முடியாது.. மாவு தொடர்ந்து புளிக்கும்போது, அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகி நச்சுக்களை உருவாக்கிவிடும்..

    ஆயுர்வேத மருத்துவத்தில் இதை 'அமா' என்று அழைப்பார்கள்.. அதாவது செரிக்கப்படாத உணவுத் துகள்கள், நச்சுகள் உடலில் சேருவதை இது குறிக்கும்.. பழைய மாவை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், குடல் தொடர்பான பிரச்சனைகள், பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை போன்றவை ஏற்படுமாம்.

    குறிப்பாக மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் வெந்தயம், 3 நாட்களுக்கு மேல் மாவில் இருக்கும்போது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.. இது இதய நோய் உள்ளவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.. செரிமானக் கோளாறு, வாய்வுத் தொல்லை, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்..

    Advertisement

    பாக்கெட் மாவு வேதிப்பொருட்கள்

    அதேபோல பாக்கெட் மாவு கலாச்சாரம் மிக ஆபத்தானது.. மாவு பாக்கெட்டிற்குள் புளிக்காமல் இருக்கவும், உப்பிக் கொண்டு போகாமல் இருக்கவும் புண்ணுக்குத் தடவப்படும் "போரிக் ஆசிட்" மற்றும் "கால்சியம் சிலிக்கேட்" போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.. இவை குடல் ஆரோக்கியத்தை முழுமையாகக் கெடுத்து, கடுமையான வயிற்று வலி மற்றும் இரைப்பை நோய்களை உண்டாக்கும்.

    சில பிராண்டுகளில் உளுந்துக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கின் கழிவுகள் சேர்க்கப்படுவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. மேலும், இந்த மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் நீர் சுத்தமானதா என்பதும், கிரைண்டர் கற்கள் சரியாகச் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியே.. சுத்தமான நீரைக் கொண்டு கல்லைக் கழுவாவிட்டால், "ஈகோலி" போன்ற பாக்டீரியாக்களின் தாக்கம் ஏற்பட்டு உடல் வறட்சி மற்றும் இரைப்பை நோய் உள்ளிட்டவை உண்டாகும்..

    Advertisement

    பிரிட்ஜில் மாவு வைக்கறீங்களா

    இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்த பாக்கெட் மாவை வாங்குவதைத் தவிர்த்து, அவ்வப்போது புதிய மாவு அரைத்துப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.. ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் பாக்கெட் மாவை வாங்கினால், அதன் தயாரிப்புத் தேதியைச் சரிபார்த்து, வாங்கியவுடன் பிரிட்ஜில் வைத்து உடனே பயன்படுத்த வேண்டும்.

    அல்லது வீட்டு மாவையே பயன்படுத்தி கொள்ளலாம்.. அப்படியே வீட்டில் அரைத்தாலும், வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தினால், அதன் மேற்புற தோலில் உள்ள Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியாக்கள் மூலம் கூடுதல் நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் கிடைக்கும்.

    Advertisement

    சத்தான தோசை மாவு

    அரிசி இட்லியில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

    அதுபோலவே பச்சை பயிறு, கொள்ளு, பாசிப்பருப்பு, அவல் போன்றவற்றைச் சேர்த்தும் மாவு அரைக்கலாம்.. அரிசி இட்லி என்றால் இரண்டுக்கு மேல் சாப்பிடக்கூடாது.. ஆனால் ராகி அல்லது ஓட்ஸ் இட்லி என்றால் மூன்று வரை தாராளமாகச் சாப்பிடலாம்.. இட்லிக்கு பாசிப்பருப்பு மற்றும் சோம்பு சேர்த்த சாம்பார் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..!!

    English Summary

    Do You Buy Packaged Dosa Batter? Do You Store Idli Batter in the Fridge? You Need to Know This First