சென்னை: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், 6 மீனவர்களின் உடல்கள் ஆந்திராவில் கோட்டகுப்பம் பகுதியில் கரை ஒதுங்கின. இந்நிலையில், காசிமேடு மீனவர்களை சந்திக்கச் சென்ற அமைச்சர் மரிய வில்சனிடம், "உயிர்போன பிறகுதான் வருவீர்களா?" என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் குமுறலுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். சென்னை கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட மீனவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆந்திர மாநிலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பான எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, மீனவர்கள் ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, புயல் எச்சரிக்கை காரணமாகப் விசைப்படகை பாதுகாப்பாக ராமயபட்டினம் கடற்கரையில் நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து, மீண்டும் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் விசைப்படகின் எஞ்ஜின் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து கடந்த 3ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் அருகிலிருந்த மற்றொரு விசைப்படகிற்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு 9 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பின்னர், மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் கடற்படையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மாயமான மீனவர்களின் குடும்பத்தினர், காசிமேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் பத்திரமாக கரைக்கு திரும்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த 3 நாட்களாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோல் அருகே 6 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாக அம்மாவட்ட ஆட்சியர் ராஜா பாபு தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த சடலங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய தமிழ்நாட்டில் இருந்து குழுவினர் விரைந்துள்ளனர். இந்நிலையில், காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினரை, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சந்திக்கச் சென்றார். அப்போது, மீனவர்களின் குடும்பத்தினர், அமைச்சரை முற்றுகையிட்டு, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளனர். "உயிர் போன பின்னாடிதான் வருவீங்களா?" அமைச்சர் மரிய வில்சனிடம் காசிமேடு மீனவர்கள் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பி உள்ளனர். மீனவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம், ஆந்திர மீனவர்கள் கண்டுபிடித்து சொல்லித்தான் மீனவர்களின் நிலை தெரியவந்துள்ளது. மீன்வளத்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 நாட்களாக தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை என அடுக்கடுக்காக மீனவர்கள் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் "புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு விசைப்படகு ஏன் கடலுக்குச் சென்றது? எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும், உரிய ஆவணங்களும் இல்லாமல் எப்படிப் படகைக் கடலுக்கு அனுப்பினார்கள்? கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்களுக்கு காப்பீடும் இல்லை. லாப நோக்கத்திற்காகப் படகு உரிமையாளர் அவர்களை கடலுக்கு அனுப்பியுள்ளார். உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என பேட்டி அளித்துள்ளார்.