சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.
மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகின. காலையில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும் தவெகவே முன்னிலை வகித்து வருகிறது. இரு தொகுதிகளிலும் திமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தாராபுரத்தில் 4 சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் தொண்டர்கள் உற்சாகமாக குவிந்தனர். ஆனால் திமுக காலை 8 மணி முதல் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இதனால் அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.